அட்டகாசமான ருசியில் வஞ்சரம் மீன் பொளிச்சது!!!

30 June 2020, 8:27 am
Quick Share

மீன்களில் வஞ்சரம் மீன் எப்போதும் ரொம்பவும் ஸ்பெஷல் தான். வஞ்சரம் மீனை வைத்து பல விதமான உணவு வகைகளை செய்யலாம். இன்று நாம் செய்ய போவது மிகவும் வித்தியாசமான மற்றும் ருசியான கேரளா ஸ்பெஷல் வஞ்சரம் மீன் பொளிச்சது. கண்டிப்பாக இதனை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். இதன் சுவையில் மெய் மறந்து போவீர்கள்….

தேவையான பொருட்கள்:

வஞ்சரம் மீன்- 2 துண்டுகள்

தேங்காய் எண்ணெய்- 5 தேக்கரண்டி

மிளகாய் தூள்- 1 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள்- ஒரு தேக்கரண்டி

மிளகு தூள்- 1/2 தேக்கரண்டி

இஞ்சி- ஒரு துண்டு

பூண்டு- 5 பல்

பச்சை மிளகாய்- 1

புளி கரைசல்- 1/2 கப்

பெரிய வெங்காயம்- 3

கொத்தமல்லி தழை- சிறிதளவு

உப்பு- தேவைக்கேற்ப

வாழை இலை- 2

கயிறு- 2

செய்முறை:

வஞ்சரம் மீன் பொளிச்சது செய்வதற்கு முதலில் நாம் மீனை ஊற வைக்க வேண்டும். அதற்கு ஒரு சிறிய கிண்ணத்தில் 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், 1/2 தேக்கரண்டி மிளகு தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

இந்த தூளை சுத்தம் செய்து வைத்த இரண்டு வஞ்சரம் மீன்கள் மீதும் தடவி விடுங்கள். இரண்டு பக்கங்களிலும் தடவிய பிறகு 10 – 15 நிமிடங்கள் மீன்களை ஊற வைத்து கொள்ளலாம். மீன் ஊறிய பிறகு ஒரு தோசை கல்லை அல்லது கடாயை அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி மீனை போட்டு வேக வைத்து கொள்ளுங்கள்.

மீன்கள் பாதி வெந்தால் போதும். இதனை ஓரமாக எடுத்து வைத்த பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி கொள்ளலாம். பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் பாதி வதங்கியதும் அதில் ஒரு துண்டு இஞ்சி, ஒரு பச்சை மிளகாய் மற்றும் 5 பல் பூண்டினை நசுக்கி சேர்த்து கொள்ளவும்.

அடுத்து 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி 1/2 கப் புளி கரைசலை ஊற்றி கொள்ளுங்கள். வெங்காயம் நன்றாக சுருண்டு வந்த பின் கடைசியில் சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து கொள்ளவும்.

இப்போது ஒரு வாழை இலை ஒன்றை எடுத்து அதில் வெங்காய மசாலா சிறிதளவு எடுத்து பரப்பி விடவும். அதன் மீது வறுத்து வைத்த ஒரு வஞ்சரம் மீனை வைத்து மீன் மீது மீண்டும் வெங்காய மசாலாவை வைக்கவும். இதன் பிறகு இலையை பார்சல் போல மடித்து ஒரு கயிறு வைத்து கட்டி விடவும். 

ஒரு கடாயை அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி அதன் மீது வாழை இலையை வைத்து ஐந்து நிமிடங்கள் மூடி வைத்து விட வேண்டும். பிறகு மறு பக்கம் திருப்பி வைத்து மீண்டும் ஐந்து நிமிடங்கள் மூடி வேக வைத்து எடுத்தால் ருசியான வஞ்சரம் மீன் பொளிச்சது தயார்… இதனை செய்யும் போது அதிக முள் இல்லாத மீனாக எடுத்து கொள்ளுங்கள்.

Leave a Reply