அடுப்பில்லாமல், எண்ணெய் பயன்படுத்தாமல் உணவா… அசத்தும் கோயம்புத்தூர் படையல் உணவகம்!!!

27 February 2021, 6:08 pm
Quick Share

ஹோட்டல் உணவு என்றாலே அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்ற எண்ணம் தான் நம் மனதில் முதலில் தோன்றும். ஆனால் ஹோட்டல் உணவு என்றால் சுவைக்கு பஞ்சமிருக்காது. ஏனென்றால் அதில் அதிகப்படியான எண்ணெய், நெய் மற்றும் சுவையூட்டல்கள் சேர்க்கப்படுகிறது. இவை அனைத்துமே உடலின் ஆரோக்கியத்தை சீர்குலைப்பவை ஆகும்.

ஆனால் ஹோட்டல் உணவு பற்றிய இந்த தகவல்கள் அனைத்தையும் பொய்யாக்கும் வகையில் பாரம்பரிய உணவு மீது பற்றுக்கொண்ட சமூக ஆர்வலர்களான சில இளைஞர்கள் வீடுகளில் சமைக்கப்படும் உணவுகளை காட்டிலும் ஆரோக்கியமான உணவுகளை சமைத்து காட்டி அசத்துகின்றனர்.

இவர்கள் செய்யும் உணவுகள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு உள்ளது. அது மட்டும் இல்லாமல் இந்த உணவுகளை சாப்பிட எத்தனை ரூபாய் வேண்டுமானாலும் செலவு செய்யலாம் என நினைக்க வைக்கிறது. கேட்கவே ஆச்சரியமாக உள்ளதா… ஆம், உண்மை தான். 

கோயம்புத்தூரில் இளைஞர்களால் சேர்ந்து நடத்தப்படும் ஒரு உணவகம் தான் ‘படையல் இயற்கை உணவகம்’. இந்த உணவகத்தில் அடுப்பு இல்லாமலும், எண்ணெய் எதுவும் பயன்படுத்தாமலும் உணவுகள் சமைக்கப்படுகிறது. கோவையைச் சேர்ந்த படையல் சிவா என்பவரால் இந்த உணவகம் நடத்தப்பட்டு வருகிறது.

வடை, பாயாசத்துடன் கூடிய மதிய உணவு இங்கு வழங்கப்படுகிறது. சாதம், சாம்பார், ரசம், காரக்குழம்பு, பொரியல், அவியல் என மதிய உணவு களைகட்டுகிறது. இவை அனைத்துமே அடுப்பில்லாமல் சமைக்கப்பட்டு பரிமாறப்படுகிறது. இவர்கள் செய்யும் உணவில் பூக்கள், நாட்டு காய்கறிகள் போன்ற இயற்கை பொருட்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் மிளகு, சீரகம் போன்ற மசாலா பொருட்கள் பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது.

இந்த உணவகத்தில் தயிர் சாதம் என்றால் ஸ்பெஷலாம். ஏனெனில் இங்கு தயிர் தயாரிக்கப்படும் முறை மிகவும் வித்தியாசமானது. தேங்காய் பாலை பன்னிரண்டு மணி நேரம் ஊற வைத்து அதனை தயிராக்கி பிறகு அதிலிருந்து தயிர் சாதம் தயாரிக்கப்படுகிறது. மேலும் அதன் சுவையை கூட்ட மாதுளை, கேரட் போன்றவையும் சேர்க்கப்படுகிறது

இங்கு காலை உணவின் விலை முப்பது ரூபாய் ஆகும். மூலிகை டீ வகைகளில் செம்பருத்தி டீ, சங்குப்பூ டீ போன்ற ஆரோக்கியமான பானங்கள் கிடைக்கிறது.  அரிசி வகைகளில் தினைவகைகள் பயன்படுத்துகின்றனர். இங்கு பார்சலும் தரப்படும். பார்சலுக்கு பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தாமல் பாக்கு மட்டை, வாழையிலை ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. 

இயற்கையை மட்டுமே நம்பி இந்த உணவகம் நடத்தப்படுகிறது. இங்கு சாப்பிடுபவர்கள் இதனை ஆஹா ஓஹோ என புகழ்ந்து தள்ளுகின்றனர். கமர்ஷியல் உணவகங்களைப் போல இந்த உணவகத்திலும் லாபம் பார்க்கலாம் என இவ்வுணவகத்தை நடத்தி வரும் சிவா கூறுகிறார்.

Views: - 136

1

0