விரிசல் எதுவும் இல்லாமல் குண்டு குண்டு குலாப் ஜாமுன் செய்ய சில இரகசிய டிப்ஸ்!!!

23 October 2020, 9:10 am
Quick Share

தீபாவளி என்றாலே நம் நினைவிற்கு முதலில் தோன்றுவது குலாப் ஜாமுன் தான். இதனை எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டாத ஒரு இனிப்பு என்று கூட சொல்லலாம். குலாப் ஜாமுன் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால் அனைவரும் விரும்பும் இந்த ஜாமுனை வீட்டில் செய்து சாப்பிட வேண்டும் என்றால் நமக்குள் ஒரு வித பயம் வந்துவிடுகிறது. கவலைப்படாதீங்க…இந்த பயத்தை எல்லாம் தூக்கி வீசிவிட்டு கடைகளில் விற்கப்படும் ஜாமுன் போல குண்டு குண்டாக குலாப் ஜாமுன் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்ப்போம். 

குலாப் ஜாமுன் செய்வதற்கு முதலில் மாவு பிசைய வேண்டும் அல்லவா… அதனை பிழையில்லாமல் எவ்வாறு பிசைவது என்பதை முதலில் தெரிந்து கொள்ளலாம். மாவு பிசையும் போது தண்ணீரை ஒரேடியாக ஊற்றாமல் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பிசைய வேண்டும். அதே போல எவ்வித அழுத்தம் கொடுக்காமல் பிசைய வேண்டும். அழுத்தம் கொடுத்தால் ஜாமுன் சாஃப்டாக வராது. 

தண்ணீரை அதிகமாக ஊற்றி விடக்கூடாது. அதே சமயத்தில் குறைவான தண்ணீரும் ஊற்றி விட கூடாது. நீங்கள் மாவு பிசைந்து முடித்த பிறகு மாவு கைகளிலும் பாத்திரத்திலும் ஒட்டாமல் வர வேண்டும். அடுத்தாக மாவை உருட்டுவதிலும் ஒரு நுணுக்கம் உள்ளது. உருண்டை சிறியதாகவும் இல்லாமல் பெரியதாகவும் இல்லாமல் மீடியம் அளவில் இருக்க வேண்டும். மாவை உருட்டும் போதும் அழுத்தம் கொடுக்கக் கூடாது. மெதுவாக உருட்ட வேண்டும். 

உள்ளங்கையில் வைத்து உருட்ட வரவில்லை என்றால் இரண்டு விரல் நுணிகளை பயன்படுத்தி உருட்டுங்கள். இவ்வாறு உருட்டும் போது எவ்வித விரிசலும் இல்லாமல் வரும். சர்க்கரை பாகினை பொறுத்தவரை பாக்கெட்டில் போட்டிருக்கும் அளவிற்கு செய்யக்கூடாது. அதனை விட குறைவான அளவே எடுக்க வேண்டும். உதாரணமாக 600 கிராம் சர்க்கரை என்ற இடத்தில் 400 கிராம் என்பதே போதுமானது. அதாவது நான்கில் ஒரு பங்கினை குறைத்து கொள்ளுங்கள். இல்லையெனில் பாகு கெட்டுப்போய்விடும். 

சர்க்கரை எடுக்கும் அளவிற்கு தண்ணீர் எடுத்து கொள்ள வேண்டும். பாகு ஒரு கம்பி பதத்திற்கு வந்தால் சரியாக இருக்கும். இதை விட சற்று குறைவாகவும் இருக்கலாம். பாகு சூடாக இருக்கும் சமயத்திலே உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொரித்து கொள்ளுங்கள். பொரிக்கும் போது அடுப்பு தீ மற்றும் எண்ணெய் மிதமான சூட்டில் இருக்க வேண்டும். அனைத்து பக்கங்களிலும் பொன்னிறமாக வந்தபின் உருண்டைகளை பாகில் போடுங்கள். சூடாக இருக்கும் போதே போட வேண்டும். அப்பொழுது தான் நமக்கு குண்டு குண்டு குலாப் ஜாமுன் கிடைக்கும். இவ்வளவு தான்ங்க… இந்த குறிப்புகளை பயன்படுத்தி இம்முறை உங்கள் வீட்டில் இப்படி ஜாமுன் செய்து பாருங்கள்.

Views: - 18

0

0