ஆரோக்கியமான பாசிப்பயறு, உளுந்தம் பருப்பு லட்டு!!!

23 March 2020, 9:03 pm
Quick Share

கொரோனாவால் அனைவரும் வீட்டிற்குள் இருக்கும் இந்த சமயத்தை எவ்வாறு நல்ல முறையில் பயன்படுத்துவது என யோசியுங்கள். உங்கள் நேரத்தை குடும்பத்துடன் சந்தோஷமாக செலவிடுங்கள். மாலை நேரங்களில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து ஏதேனும் ஆரோக்கியமான பண்டங்களை செய்து சாப்பிடலாம். அதற்கு ஏற்ற ஒரு பண்டத்தை தான் இன்று நாம் செய்ய போகிறோம். பருப்புகளை கொண்டு புரதச்சத்து மிகுந்த ஒரு மாலை நேர ஸ்நாக் ஐட்டத்தை செய்யலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

உளுந்தம் பருப்பு- 1கப்

கடலைப் பருப்பு- 1/2 கப்

பாசிப்பயறு- 1 

நிலக்கடலை- 1/2 கப்

நாட்டு சர்க்கரை- 1 1/4 கப்

நெய்- 1/2 கப்

ஏலக்காய் தூள்- ஒரு சிட்டிகை

செய்முறை:

ஒரு வானலை அடுப்பில் வைத்து ஒரு கப் பாசிப்பயறை எண்ணெய் ஊற்றாமல் ட்ரை ரோஸ்ட் செய்து கொள்ளுங்கள். அடுப்பை மிதமான தீயில் வைத்து பருப்பு கருகி விடாமல் பார்த்து கொள்ளவும். பாசிப்பயறு இல்லையெனில் பாசிப்பருப்பு கூட சேர்த்து கொள்ளலாம். வறுத்த பிறகு இதனை ஒரு தட்டில் தனியாக எடுத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து இதே போல கடலைப் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பையும் எண்ணெய் சேர்க்காமல் வறுத்துக் கொள்ளுங்கள். வாசனை வரும் வரை வறுத்து எடுத்து வையுங்கள். தோலுடன் கூடிய கருப்பு உளுந்து சேர்த்தால் சுவை அதிகரிப்பதோடு ஆரோக்கியமும் கூடும். 

பிறகு 1/2 கப் அளவு நிலக்கடலையை வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். வறுத்த பிறகு அதனை உடைத்து தனியாக வைத்து விடலாம். நிலக்கடலையை மிக்ஸியில் போட்டு அரைக்க கூடாது. அடுத்து அரைத்து வைத்த பாசிப்பயறை தனியாக மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளுங்கள்.

மேலும் உளுந்தம்பருப்பு மற்றும் கடலை பருப்பையும் நைசாக அரைத்து கொள்ளவும். இப்போது அரைத்த மாவை எல்லாம் ஒரு மிக்ஸிங் பவுலில் போட்டு கூடவே ஒரு சிட்டிகை ஏலக்காய் தூள் மற்றும் 1/2 கப் வறுத்து உடைத்த நிலக்கடலை சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ளலாம். சுவைக்கு ஏற்ப நாட்டு சர்க்கரை சேர்த்து கலந்து விடவும். நாம் எடுத்துக் கொண்ட அளவிற்கு 1 1/4 கப் நாட்டு சர்க்கரை தேவைப்படும்.

1/2 கப் அளவு நெய்யை உருக்கி கொஞ்சம் கொஞ்சமாக மாவோடு சேர்த்து பிசைந்து லட்டு பிடிக்க ஆரம்பியுங்கள். முந்திரி, பிஸ்தா, பாதாம் பிடித்தவர்கள் அதனையும் வறுத்து சேர்த்து கொள்ளலாம். ஆரோக்கியமான லட்டு தயார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்த பண்டம் நிச்சயம் பிடிக்கும்.