சளி, இருமலை போக்கும் மிளகு ரசம் வைப்பது எப்படி???

27 March 2020, 10:31 am
Quick Share

சளி மற்றும் இருமல் பிரச்சனை இருந்தா உடனடியாக இந்த ரசத்தை வைத்து குடியுங்கள். விரைவில் நிவாரணம் பெறலாம். அதனை செய்ய நம்ம சமையல் அறைக்குள் போகலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

மிளகு- 2 தேக்கரண்டி

சீரகம்- 1 தேக்கரண்டி

தக்காளி- 2

பூண்டு- 4 பல்

புளி- நெல்லிக்காய் அளவு

கடுகு- 1/8 தேக்கரண்டி

வெந்தயம்- 1/8 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய்- 2

பெருங்காயம்- 1/8 தேக்கரண்டி

கருவேப்பிலை- இரண்டு கொத்து

கொத்தமல்லி தழை- சிறிதளவு

எண்ணெய்- 1 தேக்கரண்டி

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

இன்று நாம் மிளகு ரசம் வைக்க இருப்பதால் மிளகை அதிகமாக எடுத்துக் கொள்ள போகிறோம். இரண்டு தேக்கரண்டி மிளகு மற்றும் ஒரு தேக்கரண்டி சீரகத்தை அம்மியில் வைத்து நுணுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். இதனை நீங்கள் மிக்ஸி ஜாரில் போட்டு கூட பவுடர் செய்து கொள்ளலாம்.

இது கூடவே நான்கு பல் பூண்டினை இடித்து வைத்து விடுங்கள். அடுத்து இரண்டு தக்காளி எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு கைகளை வைத்து பிசைந்து வைத்து கொள்ளவும். தக்காளி நன்றாக பழுத்த தக்காளியாக இருக்க வேண்டும். 

ஒரு நெல்லிக்காய் அளவு புளியை பத்து நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்த பிறகு அதனை கரைத்து புளி தண்ணீர் எடுத்து வைத்து கொள்ளுங்கள். இப்போது நாம் ரசம் செய்ய ஆரம்பித்து விடலாம். அதற்கு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றுங்கள்.

எண்ணெய் காய்ந்த பிறகு 1/8 தேக்கரண்டி கடுகு போட்டு, கடுகு பொரிந்த உடன் 1/8 தேக்கரண்டி வெந்தயம், 1/8 தேக்கரண்டி பெருங்காயம் மற்றும் இரண்டு காய்ந்த மிளகாய் போட்டுக் கொள்ளுங்கள். அடுத்ததாக நாம் இடித்து வைத்த மிளகு, சீரகம் மற்றும் பூண்டினை சேர்த்து கொள்ளலாம்.

இப்போது கரைத்து வைத்த தக்காளி மற்றும் புளி தண்ணீர் ஊற்றுங்கள். ரசத்திற்கு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பையும் சேர்த்து விடலாம். ரசம் அதிகமாக கொதிக்க கூடாது. ஒன்று அல்லது இரண்டு கொதி வந்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு இரண்டு கொத்து கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழை தூவி சூடாக பரிமாறவும்.