செட்டிநாடு ஸ்டைலில் பீன்ஸ் முட்டை பொரியல் செய்வது எப்படி…???

24 February 2021, 6:25 pm
Quick Share

செட்டிநாடு சமையல் என்றாலே காரசாரமான, அதிகப்படியான சுவைக்கு பெயர் போன ஒன்று. அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது செம டேஸ்டான பீன்ஸ் முட்டை பொரியல். இதனை மதிய உணவுக்கு தொட்டுக்கையாக செய்யலாம். இது சுவை மிகுந்ததாக இருப்பதோடு செய்வதற்கும் எளிமையானது. பீன்ஸ் ஏகப்பட்ட சத்துக்களை தனக்குள் வைத்திருக்கிறது.

இதனை அடிக்கடி உங்கள் உணவில் சேர்த்து வாருங்கள். ஆனால் ஒரு சிலருக்கு பீன்ஸ் பிடிக்காது. அதனை முட்டையுடன் செய்து கொடுத்தால் நிச்சயமாக சாப்பிடுவார்கள். இப்போது பீன்ஸ் முட்டை பொரியல் எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:
முட்டை – 6
பீன்ஸ் – 1 கப் (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
சீரகம் – 1 தேக்கரண்டி
மிளகு – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய் – 2 தேக்கரண்டி
உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:
*பீன்ஸ் முட்டை பொரியல் செய்வதற்கு முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து கொள்ளுங்கள்.

*இதில் எண்ணெய் ஊற்றவும்.

*எண்ணெய் சூடானதும் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

*இதில் பொடியாக நறுக்கிய பீன்ஸ் சேர்த்து வதக்கவும். இதற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.

*பீன்ஸ் வேகும் நேரத்தில் மிளகு மற்றும் சீரித்தை அம்மியில் பொடி செய்து எடுத்து கொள்ளலாம்.

*இந்த பொடியை பீன்ஸ் வெந்த பிறகு சேர்த்து ஒரு நிமிடம் மட்டும் கிளறவும்.

*அடுத்து முட்டைகளை ஒவ்வொன்றாக உடைத்து ஊற்றுங்கள்.

*அடுப்பை சிம்மில் வைத்து கொள்ளுங்கள். இல்லை என்றால் முட்டை கருகி விடும்.

*முட்டை வெந்ததும் கடைசியில் சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

Views: - 49

0

0