பேக்கரியில் வாங்கும் சுவை கொஞ்சம் கூட மாறாமல் வீட்டில் பால் பன் செய்வது எப்படி???
28 August 2020, 6:49 pmகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த பால் பன் எப்படி செய்வது என பார்க்கலாம். இதனை இன்று நாம் மைதா மாவு பயன்படுத்தி தான் செய்ய போகிறோம். அதற்கு பதிலாக நீங்கள் கோதுமை மாவும் பயன்படுத்தி கொள்ளலாம். சுவை நன்றாக இருக்கும். ஆனால் பேக்கரியில் வாங்கும் சுவை வேண்டும் என்றால் மைதா மாவு பயன்படுத்த வேண்டும்.
தேவையான பொருட்கள்:
- மைதா மாவு- ஒரு கப்
- சர்க்கரை- ஒரு கப்
- தயிர்- 1/4 கப்
- சோடா உப்பு- 1/4 தேக்கரண்டி
- எலுமிச்சை சாறு- 4 துளிகள்
- ஏலக்காய்- 3
- நெய்- ஒரு தேக்கரண்டி
- எண்ணெய்- பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
ஒரு கப் மைதா மாவிற்கு ஒரு கப் சர்க்கரை தேவைப்படும். அந்த ஒரு கப் சர்க்கரையில் மூன்று தேக்கரண்டி சர்க்கரை தனியாக எடுத்து அதனுடன் மூன்று ஏலக்காய் சேர்த்து அரைத்து கொள்ளவும். இப்போது ஒரு கிண்ணத்தில் 1/4 கப் தயிருடன் 1/4 தேக்கரண்டி சோடா உப்பு சேர்த்து கலந்து வைத்து கொள்ளுங்கள்.
மாவு பிசைய ஒரு அகலமான பாத்திரம் எடுத்து அதில் ஒரு கப் மைதா மாவு சேர்க்கவும். ஒரு சிட்டிகை உப்பு, அரைத்து வைத்த சர்க்கரை தூள் சேர்த்து கிளறவும். அடுத்ததாக ஒரு தேக்கரண்டி நெய், தயிர் மற்றும் சோடா உப்பு கலவையை சேர்த்து கொள்ளலாம். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மாவை பிசையுங்கள்.
அதிகமாக தண்ணீராக இல்லாமலும் ரொம்பவும் கெட்டியாக இல்லாமலும் இருக்குமாறு பிசைந்து கொள்ளவும். பிறகு மாவை மூடி 30 நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேரம் வரை ஊற வைக்கவும். இதற்கு இடையில் சர்க்கரை பாகு செய்ய ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு கப் சர்க்கரை மற்றும் 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும்.
சர்க்கரை பாகு ஒரு சிறு கம்பி பதம் வந்தாலே போதுமானது. இதில் 3 – 4 துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து அடுப்பை அணைத்து விடலாம். மாவு ஊறிய பின் கடாயில் எண்ணெய் ஊற்றி வையுங்கள். எண்ணெய் மிதமான சூட்டில் இருக்க வேண்டும். கையில் எண்ணெய் அல்லது நெய் தடவி மாவு எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
உங்களுக்கு அதிகமான இனிப்பு சுவை வேண்டுமெனில் பொரித்த உருண்டைகளை சூடான சர்க்கரை பாகில் சேர்க்கவும். அல்லது சர்க்கரை பாகு ஆறிய பின் சேர்த்தால் இனிப்பு சற்று குறைவாக இருக்கும். அவ்வளவு தான்… சுவையான பால் பன் தயார்.