சுவையான பேல் பூரியை கூட வீட்டில் செய்து சாப்பிடலாம்!!!
27 August 2020, 9:37 amரோட்டோர கடைகளில் பானி பூரி, மசாலா பூரி, பேல் பூரி ஆகியவற்றை வாங்கி உண்ணும் சுவையே தனி தான். ஆனால் தற்போது சுகாதாரம் காரணமாக நாம் வெளியில் சமைத்த உணவுகளை வாங்கி உண்ண தயக்கம் காட்டுகிறோம். எனவே இன்று நம் வீட்டிலே பேல் பூரி எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…
தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம்-1/2
தக்காளி- 1/2
பொரி- 3 கப்
மிக்ஸர்- 1/4 கப்
ஓமப் பொடி- 1/4 கப்
கொண்டைக் கடலை- 1/4 கப்
உருளைக்கிழங்கு- 1
கேரட்- 1
பானி பூரி- 5
வேர்க்கடலை- 1/4 கப்
பச்சை மிளகாய்- 4
மிளகாய் தூள்- 1/2 தேக்கரண்டி
சாட் மசாலா- 1 தேக்கரண்டி
புளி- 10 துண்டு
எலுமிச்சை சாறு- 1 தேக்கரண்டி
புதினா- ஒரு கையளவு
கொத்தமல்லி தழை- ஒரு கையளவு
இஞ்சி- ஒரு துண்டு
பேரிச்சம் பழம்- 6
வெல்லம்- 1/4 கப்
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
பேல் பூரி செய்வதற்கு முதலில் பச்சை சட்னி, புளி சட்னி என்று இரண்டு சட்னி செய்ய வேண்டும். பச்சை சட்னிக்கு மிக்ஸி ஜாரில் ஒரு கையளவு புதினா இலை, ஒரு கையளவு கொத்தமல்லி தழை, ஒரு துண்டு இஞ்சி, இரண்டு பச்சை மிளகாய், 1/2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து புளி சட்னி செய்வதற்கு பத்தில் இருந்து பன்னிரண்டு புளித் துண்டை பதினைந்து நிமிடங்கள் ஊற வைத்து புளிச் சாறை ஒரு பேனில் ஊற்றி அடுப்பில் வைக்கவும். இதனோடு ஆறு பேரிச்சம் பழம் மற்றும் 1/4 கப் வெல்லம் சேர்க்கவும். மேலும் 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு போட்டு கெட்டியாகும் வரை கொதிக்கட்டும். கெட்டியான பிறகு அடுப்பை அணைத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு பெரிய பவுலில் மூன்று கப் பொரி, 1/4 கப் மிக்ஸர், 1/4 கப் ஓமப் பொடி, நறுக்கிய 1/2 பெரிய வெங்காயம், நறுக்கிய 1/2 தக்காளி, 1/4 கப் வேக வைத்த வெள்ளை கொண்டைக் கடலை, ஒரு வேக வைத்த உருளைக்கிழங்கு, ஒரு துருவிய கேரட், நான்கில் இருந்து ஐந்து பானி பூரி( இது சேர்க்கவில்லை என்றாலும் பரவாயில்லை), 1/4 கப் வறுத்த வேர்க்கடலை, இரண்டு நறுக்கிய பச்சை மிளகாய், 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி சாட் மசாலா, இரண்டு தேக்கரண்டி பச்சை சட்னி, இரண்டு தேக்கரண்டி புளி சட்னி, 1/2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, சிறிதளவு கொத்தமல்லி தழை, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
அவ்வளவு தான்… கடைசியாக பரிமாறும் முன் மேலே சிறிதளவு ஓமப் பொடியும் கொத்தமல்லி தழையும் தூவி கொடுக்கவும். உங்களுக்கு பிடித்து இருந்தால் நறுக்கிய மாங்காய், வேக வைத்த பாசிப் பருப்பு, கருப்பு கொண்டைக் கடலை என்று எது வேண்டுமானாலும் சேர்க்கலாம்.