அனைவருக்கும் பிடித்த சுவையான மசாலா டீ போடலாமா???

20 May 2020, 12:12 pm
how to prepare masala tea at home in tamil
Quick Share

டீ கடையில் போடும் டீக்கு எப்போதும் தனி சுவை உண்டு. பலர் அதற்கு அடிமையாகவே இருப்பார்கள். இன்று நாம் வீட்டிலே சுவையான மசாலா டீ செய்ய போகிறோம். இதில் நாம் சேர்க்க உள்ள மசாலாக்கள் நாவிலே நீண்ட நேரம் இருந்து மீண்டும் மீண்டும் இந்த டீயை குடிக்க தூண்டும். இதனை எப்படி செய்வது என பார்க்கலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்:

  • பால்- 1 கப்
  • டீ தூள்- 1 தேக்கரண்டி
  • பட்டை- 1 சிறிய துண்டு
  • கிராம்பு- 2 
  • ஏலக்காய்- 3
  • மிளகு- 6
  • இஞ்சி- ஒரு இன்ச் அளவு
  • சர்க்கரை- 2 தேக்கரண்டி

செய்முறை:

மசாலா டீ போடுவதற்கு முதலில் நாம் மசாலாவை தயார் செய்து கொள்ளலாம். அதற்கு ஒரு சிறிய துண்டு பட்டை, இரண்டு கிராம்பு, மூன்று ஏலக்காய், ஆறு போல மிளகு ஆகியவற்றை இடித்து கொள்ளுங்கள். தூளாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்களுக்கு மிளகு காரமாக இருக்கும் என நினைத்தால் அது தேவையில்லை.

அடுத்ததாக ஒரு இன்ச் அளவு இஞ்சி எடுத்து அதனையும் இடித்து வைத்து கொள்ளவும். இப்போது டீ போடும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி அதில் நாம் இடித்து வைத்த மசாலா, இஞ்சியை மற்றும் ஒரு தேக்கரண்டி டீ தூளை சேர்த்து கொள்ளலாம். இது இரண்டில் இருந்து மூன்று நிமிடங்கள் கொதிக்கட்டும். 

டிக்காஷன் நன்றாக கொதித்து வரும் போது அதில் ஒரு கப் பால், 2 – 3 தேக்கரண்டி சர்க்கரை ஆகியவை சேர்த்து கொள்ளவும். உங்கள் சுவைக்கு ஏற்ப சர்க்கரையை கூட்டவோ குறைக்கவோ செய்யுங்கள். அதே போல டீ தண்ணியாக இல்லாமல் இன்னும் கூட கெட்டியாக இருக்க வேண்டும் என நினைத்தால் 1 1/2 கப் தண்ணீருக்கு பதிலாக 1 கப் தண்ணீர் மட்டும் ஊற்றி டிக்காஷன் போட்டு கொள்ளவும்.

பால் இரண்டு நிமிடங்கள் டிக்காஷனோடு சேர்த்து கொதித்தால் தான் மசாலாக்கள் அனைத்தும் பாலில் இறங்கும். பால் பொங்கி வரும் போது நாம் அடுப்பை அணைத்து விடலாம். இது ஒரு நிமிடம் அப்படியே இருக்கட்டும். பிறகு வடிகட்டி நுரை பொங்க ஆற்றி மசாலா டீயை பருகலாம்.

Leave a Reply