குழம்பு எப்போதும் ஒரே மாதிரி செய்தால் போர் அடிக்கும்… இந்த வாரம் மட்டன் வாங்கினால் இந்த மாதிரி கிரேவி செய்து பாருங்க!!!

29 August 2020, 7:19 pm
Quick Share

மட்டன் குழம்பிற்கு மயங்காத அசைவ பிரியரே இல்லை என சொல்லலாம். ஆனால் எப்போதும் ஒரே மாதிரியான மட்டன் குழம்பு சாப்பிட்டால் நிச்சயமாக போர் அடிக்கும். எனவே இந்த வாரம் மட்டன் வாங்கினால் இன்று நாம் பார்க்க இருக்கும் ரெசிபி மாதிரி வித்தியாசமான முறையில் செய்து சாப்பிடுங்கள். 

தேவையான பொருட்கள்:

மட்டன்- 1 கிலோ

பெரிய வெங்காயம்- 2

பச்சை மிளகாய்- 2

இஞ்சி- ஒரு துண்டு

பூண்டு- 15 பற்கள்

மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி

மிளகாய் தூள்- 3/4 தேக்கரண்டி

மல்லி தூள்- ஒரு தேக்கரண்டி

மட்டன் மசாலா- 3/4 தேக்கரண்டி

தயிர்- 200 கிராம்

புதினா- ஒரு கையளவு

கொத்தமல்லி தழை- ஒரு கையளவு

சோம்பு- 1/2 தேக்கரண்டி

பட்டை- 1

கிராம்பு- 2

ஏலக்காய்- 3

நட்சத்திர சோம்பு- 1

பிரியாணி இலை- 1

எண்ணெய்- 2 தேக்கரண்டி

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

மட்டன் குழம்பு செய்வதற்கு முதலில் ஒரு கிலோ மட்டனை நன்றாக சுத்தம் செய்து எடுத்து கொள்ளுங்கள். அதனோடு அரைத்த ஒரு துண்டு இஞ்சி, 2 பச்சை மிளகாய், 15 பூண்டு பற்கள் விழுது, தேவையான அளவு உப்பு, 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், 3/4 தேக்கரண்டி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி மல்லி தூள், 3/4 தேக்கரண்டி மட்டன் மசாலா, இரண்டு பெரிய வெங்காயத்தின் விழுது, 200 கிராம் தயிர், நறுக்கிய ஒரு கையளவு கொத்தமல்லி தழை, ஒரு கையளவு புதினா ஆகியவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். 

இந்த கலவை 1/2 மணி நேரம் ஊறட்டும். மட்டன் மசாலாவோடு நன்றாக ஊறிய பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விடவும். எண்ணெய் காய்ந்ததும் 1/2 தேக்கரண்டி சோம்பு, ஒரு பட்டை, ஒரு பிரியாணி இலை, 2 கிராம்பு, 3 ஏலக்காய், ஒரு நட்சத்திர சோம்பு ஆகியவை சேர்த்து தாளிக்கவும். 

பின் நாம் ஊற வைத்துள்ள மட்டனை சேர்த்து இரண்டு நிமிடங்கள் கிளறவும். இதற்கு நாம் தண்ணீர் எதுவும் ஊற்ற தேவையில்லை. தயிர், வெங்காய விழுது மற்றும் மட்டனில் உள்ள தண்ணீரே இதற்கு போதுமானது. குக்கரை மூடி நான்கு விசில் வரும் வரை காத்திருக்கவும். குக்கரில் உள்ள பிரஷர் அனைத்தும் அடங்கியதும் மறுபடியும் குக்கரை அடுப்பில் வைத்து 1/2 தேக்கரண்டி மட்டன் மசாலா மற்றும் 1/4 தேக்கரண்டி மிளகு தூள் சேர்த்து மூன்று நிமிடங்கள் கொதிக்க விடவும். கடைசியில் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.