அதிக ரூபாய் கொடுத்து காஜு பிஸ்தா ரோல் இனி கடைகளில் வாங்க வேண்டாம்!!!

31 July 2020, 5:22 pm
Quick Share

பண்டிகை என்றால் தான் பலகாரம் செய்ய வேண்டும் என்பதில்லை. வீட்டில் இருக்கும் நம் குழந்தைகளுக்கு கடைகளில் தின்பண்டங்கள் வாங்கி தருவதை தவிர்த்துவிட்டு சுகாதாரமான முறையில் சத்து மிக்க தின்பண்டங்களை நாமே செய்து தரலாம். இன்றைக்கு காஜு பிஸ்தா ரோல் எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

முந்திரி பருப்பு- 150 கிராம்

பிஸ்தா- 60 கிராம்

சர்க்கரை- 112 கிராம்

ஏலக்காய்- 2

பால் பவுடர்- 2 தேக்கரண்டி 

நெய்- 2 தேக்கரண்டி 

பச்சை கலர்- சில துளிகள்

செய்முறை:

காஜு பிஸ்தா ரோல் செய்ய முதலில் நாம் இந்த ரோலின் உள்ளே வைக்க கூடிய பூரணத்தை தயார் செய்து கொள்ளலாம். அதற்கு இரண்டு தேக்கரண்டி  சர்க்கரை மற்றும் இரண்டு ஏலக்காயை பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு 1/2 கப் பிஸ்தா கிட்டதட்ட 60 கிராம் இருக்கும். 

அதனையும் மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். பொடி செய்யும் போது ஒரேடியாக அரைக்காமல் விட்டு விட்டு தான் அரைக்க வேண்டும். இல்லையெனில் பிஸ்தாவிலிருந்து எண்ணெய் வெளியில் வந்து பவுடர் போல இல்லாமல் பேஸ்ட் போல் ஆகி விடும்.

இப்போது நாம் அரைத்து வைத்த பிஸ்தாவையும், சர்க்கரை மற்றும் ஏலக்காய் பவுடரையும் ஒரு சல்லடையில் சலித்து ஒரு பவுலுக்கு மாற்றி எடுத்துக் கொள்ளுங்கள். இந்த ஸ்வீட் கலராக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு சில துளிகள் பச்சை கலரை ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பிசைந்து கொள்ளவும்.

பால் அதிகம் சேர்க்க கூடாது. ஒரு தேக்கரண்டி போதுமான அளவு. கலர் தேவை இல்லை என்று நினைப்பவர்கள் பாலை மட்டும் ஊற்றி உருண்டை பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். உருண்டை பிடிக்கும் போது கையில் நெய் தடவி உருண்டை பிடியுங்கள்.

பிறகு ஒரு கப் முந்திரி பருப்பையும் பவுடர் செய்து எடுத்துக் கொள்ளவும். பிஸ்தா அரைத்தது போலவே முந்திரியையும் விட்டு விட்டு அரைக்க வேண்டும். இந்த முந்திரி பவுடரோடு இரண்டு தேக்கரண்டி பால் பவுடர் சேர்த்து சல்லடையில் சலித்து எடுத்து கொள்ளுங்கள். இப்போது நாம் சர்க்கரை பாகை தயார் செய்து கொள்ளலாம். 

அதற்கு ஒரு பாத்திரத்தில் அரை கப் சர்க்கரை போட்டு அதனோடு 1/4 கப் தண்ணீர் ஊற்றுங்கள். சர்க்கரை பாகு ஒரு கம்பி பதம் வந்த பிறகு உடனடியாக முந்திரி பவுடரை சேர்த்து கிளறவும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் சாஃப்டாக இருக்கும் போதே அடுப்பை அணைத்து விடலாம்.

கெட்டியாகி விட்டால் பர்ஃபி போல் ஆகி விடும். இதனை சற்று ஆற விட்டு கை வைக்கும் சூடு வந்த பின்னர் ஒரு பட்டர் பேப்பரை விரித்து அதன் மேல் இந்த மாவை வைத்து சப்பாத்தி கட்டை கொண்டு விரித்து கொள்ளுங்கள். அதன் மேல் நாம் ஏற்கனவே செய்து வைத்த பிஸ்தா பூரணத்தையும் வைத்து விரித்து பிறகு ரோல் செய்து கொள்ளுங்கள். ரோல் செய்த பிறகு நமக்கு தேவையான அளவுக்கு வெட்டி பீஸ் போட்டுக் கொள்ளலாம். டேஸ்டான காஜு பிஸ்தா ரோல் தயார். இதனை நீங்களும் கண்டிப்பாக உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்…

Leave a Reply