அற்புதமான சுவையில் மட்டர் பன்னீர் மசாலா!!!

19 August 2020, 12:30 pm
Quick Share

இன்று நாம் வட இந்திய உணவான மட்டர் பன்னீர் மசாலா எப்படி செய்வது என்று பார்க்கப் போகிறோம். மட்டர் என்றால் பச்சை பட்டாணி. பட்டாணி கொண்டு தான் இந்த குருமாவை நாம் செய்யப் போகிறோம். பட்டாணி குருமாவே சூப்பரா இருக்கும். அதுலயும் பன்னீர் பட்டாணி மசாலா இன்னும் டக்கரா இருக்கும். 

தேவையான பொருட்கள்:

பட்டாணி- 100 கிராம்

பன்னீர்- 150 கிராம்

பெரிய வெங்காயம்- 2

தக்காளி- 3

பிரியாணி இலை- 1

பட்டை- 1

சீரகம்- 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி

சீரக தூள்- 1 தேக்கரண்டி

மல்லி தூள்- 1 தேக்கரண்டி

கரம் மசாலா- 1 தேக்கரண்டி

காஷ்மீரி மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி

தயிர்- 2 தேக்கரண்டி

முந்திரி பருப்பு- 5

இஞ்சி- 1 அங்குலம்

பூண்டு- 3 பல்

கொத்தமல்லி தழை- சிறிதளவு

எண்ணெய்- 4 tbsp

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

மட்டர் பன்னீர் மசாலா செய்ய முதலில் நாம் ஒரு பேஸ்ட் தயார் செய்ய வேண்டும். அதற்கு ஒரு கடாயில்  இரண்டு தேக்கரண்டி  எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்த பின் இரண்டு நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். இதனுடன் சிறிதளவு உப்பு போட்டு வதக்கினால் வெங்காயம் சீக்கிரமே வதங்கி விடும்.

வெங்காயம் வதங்கியதும் ஐந்து முந்திரி பருப்பை போடவும். ஐந்திற்கு மேல் சேர்த்தால் முந்திரி வாசனை அதிகமாக தெரியும். எனவே ஐந்து போதுமானது. வெங்காயம் கண்ணாடி போல் வதங்கியதும் ஒரு இன்ச் அளவு இஞ்சி, மூன்று பல் பூண்டு மற்றும் மூன்று நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். 

தக்காளி வெந்த பின் அடுப்பை அணைத்து விட்டு இந்த கலவையை ஆற வைத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு ஒரு கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் ஒரு பிரியாணி இலை, ஒரு பட்டை, ஒரு தேக்கரண்டி சீரகம், 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் போட்டு கிளறி விடவும்.

பின்னர் நாம் அரைத்து வைத்த மசாலா, ஒரு தேக்கரண்டி சீரக தூள், ஒரு தேக்கரண்டி மல்லி தூள், ஒரு தேக்கரண்டி கரம் மசாலா, ஒரு தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து கிளறவும். காஷ்மீரி மிளகாய் தூள் இல்லையெனில் சாதாரண மிளகாய் தூள் கூட சேர்த்து கொள்ளலாம்.

இப்போது இரண்டு தேக்கரண்டி கெட்டியான தயிர் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர்( ஒரு கப்) ஊற்றவும். இதற்கு ஒரு மூடி போட்டு 8ல் இருந்து 10 நிமிடங்கள் வரை மிதமான சூட்டில் வேக வைக்கவும். பிறகு இதனோடு 100 கிராம் அளவு பச்சை பட்டாணி மேலும் 150 கிராம் பன்னீர் போடவும்.

பன்னீரை பச்சையாகவும் சேர்க்கலாம். இல்லையெனில் நெய் அல்லது எண்ணெய்யில் ஃபிரை செய்தும் சேர்க்கலாம். பன்னீர் உடையாமல் குழம்பை கலக்கவும். மூன்றில் இருந்து நான்கு நிமிடங்கள் வரை வேகவிட்டு கடைசியாக சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான மட்டர் பன்னீர் மசாலா தயார்.

இந்த மசாலா சப்பாத்தி, பூரி, நான், புலவ் எல்லாவற்றிற்கும் அருமையாக இருக்கும்.