இந்த மழைக்கு சுட சுட சுவையான பால் கொழுக்கட்டை செய்து சாப்பிடுங்களேன்!!!!

29 June 2020, 9:57 am
Quick Share

இன்றைக்கு நாம் பார்க்க இருக்கும் ரெசிபி அனைவருக்கும் அதிலும் குறிப்பாக குழந்தைகள் விரும்பி சாப்பிட கூடிய பால் கொழுக்கட்டை. வழக்கமாக பாயாசம், கேசரி என்று செய்து சாப்பிடுவதை விட இது போல வித்தியாசமான தின்பண்டங்களை செய்து சாப்பிட்டு மகிழுங்கள். பால் கொழுக்கட்டை எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க….

தேவையான பொருட்கள்:

கொழுக்கட்டை மாவு- 1/2 கப்

பால்- 1 1/2 கப்

தேங்காய் பால்- 1 1/2 கப்

வெல்லம்- 200 கிராம்

ஏலக்காய் பொடி- 1 தேக்கரண்டி

நெய்- 1 தேக்கரண்டி

உப்பு- ஒரு சிட்டிகை

சூடான தண்ணீர்- 1/2 கப்

செய்முறை:

பால் கொழுக்கட்டை செய்ய முதலில் மாவு தயார் செய்து கொள்ளலாம். அதற்கு ஒரு பெரிய அகலமான பாத்திரத்தில் 1/2 கப் கொழுக்கட்டை மாவை சேர்த்து கூடவே ஒரு சிட்டிகை உப்பு, ஒரு தேக்கரண்டி நெய் மற்றும் 1/2 கப் சூடான தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும். தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பிசையவும்.

மாவு பிசைந்ததும் அதனை நன்றாக ஆற விட்டு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் ஒரு கனமான பாத்திரத்தை வைத்து 1 1/2 கப் பால் ஊற்றி கொதிக்க விடவும். பால் கொதித்த பின் உருண்டைகளை சேர்த்து 15 நிமிடங்கள் மிதமான தீயில் மூடி போட்டு வேக வையுங்கள்.

இதற்கு இடையில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 1/2 கப் அளவு தண்ணீர் ஊற்றி 200 கிராம் வெல்லத்தை சேர்க்கவும். வெல்லம் கரைந்து ஐந்து நிமிடங்கள் கொதித்த பிறகு அடுப்பை அணைத்து விடலாம். இந்த சமயத்தில் பால் கொழுக்கட்டை முழுவதுமாக வெந்து இருக்கும். 

அதில் ஒரு தேக்கரண்டி ஏலக்காய் பொடி சேர்த்து கூடவே 1 1/2 கப் தேங்காய் பால் ஊற்றி மேலும் ஐந்து நிமிடங்கள் கொதித்த பிறகு அடுப்பை அணைத்து கொள்ளலாம். கடைசியில் வெல்லப்பாகை ஒரு வடிகட்டி கொண்டு வடிகட்டி பால் கொழுக்கட்டையில் ஊற்றி சூடாக பரிமாறவும்.