கம கம ரோட்டோர கடை பரோட்டா சால்னா!!!

1 September 2020, 1:00 pm
Quick Share

ரோட்டோர கடைகளில் விற்கப்படும் பரோட்டா சால்னா எப்படி செய்வது என இந்த பதிவில் பார்ப்போம். இதற்கு எந்த காய்கறியும் தேவையில்லை. வெங்காயம், தக்காளி மற்றும் ஒரு சில மசாலா பொருட்களை வைத்தே இந்த சால்னாவை செய்து விடலாம். இது சப்பாத்தி, பூரி, பிரியாணி ஆகியவற்றிற்கு அட்டகாசமான சைடு டிஷாக இருக்கும். 

தேவையான பொருட்கள்:

வெங்காயம்- 2

தக்காளி- 2

பச்சை மிளகாய்- 2

இஞ்சி பூண்டு விழுது- 1 தேக்கரண்டி

பட்டை- 2

ஏலக்காய்- 4

கிராம்பு- 4

சோம்பு- 1 1/2 தேக்கரண்டி

சீரகம்- 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி

மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி

மல்லி தூள்- 1 தேக்கரண்டி

தேங்காய் துருவல்- 1/2 கப்

கசகசா- 1 தேக்கரண்டி

முந்திரி பருப்பு- 6

எண்ணெய்- 3 தேக்கரண்டி

கறிவேப்பிலை- ஒரு கொத்து

கொத்தமல்லி தழை- சிறிதளவு

புதினா- சிறிதளவு

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

ஒரு கடாயை அடுப்பில் வைத்து மூன்று தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அதில் ஒரு பட்டை, 2 கிராம்பு, 2 ஏலக்காய், 1/2 தேக்கரண்டி சோம்பு, 2 பச்சை மிளகாய், ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டின் பச்சை வாசனை போன பிறகு இரண்டு நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் 1/4 மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி மல்லி தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், நறுக்கிய இரண்டு தக்காளி சேர்த்து வதக்கவும். தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து தக்காளி மற்றும் வெங்காயம் பேஸ்டாக வேகும் வரை கொதிக்கட்டும். 

இதற்கு இடையில் ஒரு மிக்ஸி ஜாரில் 1/2 கப் துருவிய தேங்காய், ஒரு பட்டை, 2 கிராம்பு, 2 ஏலக்காய், 1/2 தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி சோம்பு, ஒரு தேக்கரண்டி கசகசா, 5 முந்திரி பருப்பு மற்றும் 1/4 கப் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும். 

தக்காளி வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்த தேங்காய் விழுதினை சேர்த்து 10 – 15 நிமிடங்கள் மூடி போட்டு கொதிக்க விடவும். கடைசியில் சிறிதளவு கொத்தமல்லி மற்றும் புதினா இலைகள் தூவி இறக்க வேண்டியது தான். கம கம பரோட்டா சால்னா தயார்.

Views: - 1

0

0