மாலை நேர அட்டகாசமான ஸ்னாக்ஸ் சுட சுட பருப்பு போலி!!!

8 August 2020, 6:47 pm
Quick Share

போலியை இரண்டு விதமாக செய்யலாம். ஒன்று தேங்காயை  பூரணமாக வைத்து செய்யப்படும் தேங்காய் போலி. மற்றொன்று கடலைப் பருப்பை பூரணமாக வைத்து செய்யும் பருப்பு போலி. இன்று பருப்பு போலி எப்படி செய்வதென்று பார்ப்போம்….

தேவையான பொருட்கள்:

  • கடலைப் பருப்பு- 1/2 கப்
  • மைதா மாவு- 1 கப்
  • வெல்லம்- 1 கப்
  • உப்பு- 1/4 தேக்கரண்டி
  • ஏலக்காய்- 4
  • எண்ணெய்- 2 தேக்கரண்டி
  • நெய்- 4 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி

செய்முறை:

பருப்பு போலி செய்ய வெளியே இருக்க கூடிய மாவையும் உள்ளே வைக்கக் வேண்டிய பூரணத்தையும் தயார் செய்ய வேண்டும். முதலில் வெளியே இருக்க கூடிய மாவை தயார் செய்து கொள்ளலாம். அதற்கு ஒரு பாத்திரத்தில் ஒரு கப் மைதா மாவை எடுத்துக் கொள்ளுங்கள். கலருக்காக 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளலாம்.

மேலும் 1/4 தேக்கரண்டி உப்பு சேர்த்து கலந்து விடவும். அரை கப்புக்கும் குறைவாக தண்ணீர் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி மாவை நன்றாக சாஃப்டாக பிசைந்து கொள்ளுங்கள். பிசைந்த பிறகு மாவு காயாமல் இருப்பதற்கும் ஊறுவதற்கும் இரண்டு தேக்கரண்டி  எண்ணெய் ஊற்றவும். இந்த மாவை மூடி இரண்டில் இருந்து மூன்று மணி நேரம் வரை ஊற வைத்து விடலாம்.

அடுத்ததாக பூரணத்தை தயார் செய்யலாம். அதற்கு 1/2 கப் கடலைப் பருப்பை சுத்தம் செய்து அலசி விட்டு ஒரு குக்கரில் போட்டு கொள்ளுங்கள். பருப்பு வேக தேவைப்படும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வைத்து கொள்ளலாம். அதிகமாக தண்ணீர் ஊற்ற வேண்டும். குக்கரில் இருந்து  நான்கு விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடுங்கள்.

குக்கரில் இருக்கும் ஃபிரஷர் அடங்கியதும் பருப்பு வெந்து விட்டதா என்பதை சரி பார்த்து கொள்ளுங்கள். இப்போது இந்த பருப்போடு அரை கப்பில் இருந்து ஒரு கப் வரை சுவைக்கு ஏற்றவாறு வெல்லம் மற்றும் நான்கு ஏலக்காயை பொடி செய்து சேர்த்து அடுப்பில் வைக்கவும். வெல்லம் கரைந்து பருப்போடு கலந்து கெட்டியாகும் வரை கிளறி விடவும். 

இது உருண்டை பிடிக்கும் பதத்திற்கு வந்த பிறகு அடுப்பில் இருந்து இறக்கி விடலாம். பூரணமும் மாவும் தயாராக உள்ளது. இப்போது ஊற வைத்த மாவில் இருந்து கொஞ்சம் மாவை எடுத்து விரித்துக் கொள்ளுங்கள். விரித்த பிறகு பூரணத்தை அதனுள்ளே வைத்து ஓரங்களை மூடி விடவும். பிறகு மறுபடியும் அதனை விரித்து கொள்ளலாம்.

நன்றாக ஊற வைத்த மாவு என்பதால் கையாளேயே விரித்து விடலாம். அப்படி இல்லை என்றால் சப்பாத்தி கட்டை கொண்டு கூட விரிக்கலாம். இப்போது தோசைக் கல்லை அடுப்பில் வைத்து 1/4 தேக்கரண்டி  நெய் ஊற்றி போலியை போடவும். ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி போட்டு மறு பக்கம் வேகட்டும். இரண்டு நிமிடங்களில் வெந்து விடும். அவ்வளவு தான். சுவையான பருப்பு போலி தயார்.