இந்த வாரம் கோழிக்கறி வாங்கினால் ருசியான பாப்கார்ன் சிக்கன் செய்து பாருங்கள்…!!!

24 August 2020, 12:18 pm
Quick Share

கடைகளில் பாப்கார்ன் சிக்கன் செய்ய பூண்டு பொடி மற்றும் வெங்காயப் பொடி பயன்படுத்துவார்கள். ஆனால் இதனை நாம் வீட்டில் செய்வதால் இந்த பொடிகள் எதுவும் சேர்க்காமல் வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களைக் கொண்டு செய்யப் போகிறோம். வாங்க… பாப்கார்ன் சிக்கன் எப்படி செய்வதுனு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

சிக்கன்- 250 கிராம்

இஞ்சி- ஒரு இன்ச் அளவு

பூண்டு- 2 பல்

பெரிய வெங்காயம்- இரண்டு இன்ச் அளவு

மைதா மாவு- 1 கப்

சோள மாவு- 1/2 கப்

மிளகாய் தூள்- 2 தேக்கரண்டி

மிளகு தூள்- 1 தேக்கரண்டி

சீரகத் தூள்- 1/2 தேக்கரண்டி

மல்லி தூள்- 1/2 தேக்கரண்டி

எண்ணெய்- பொரிக்க

முட்டை- 2

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

பாப்கார்ன் சிக்கன் செய்ய முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு இன்ச் அளவு இஞ்சி, இரண்டு பல் பூண்டு மற்றும் இரண்டு இன்ச் அளவு பெரிய வெங்காயம் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும். இப்போது நாம் சிக்கனை ஊற வைத்து கொள்ள  ஒரு மிக்ஸிங் பவுலில் ஒரு கப் தயிர், இரண்டு முட்டை, நாம் ஃபிரஷாக அரைத்து வைத்த மசாலாவை வடிகட்டி சேர்த்து கலந்து கொள்ளவும்.

பிறகு ஒரு தேக்கரண்டி  மிளகாய் தூள், சிறிதளவு மிளகு தூள், தேவையான அளவு உப்பு போட்டு அனைத்தையும் கலந்து விடவும். கலந்து விட்ட பிறகு 250 கிராம் எலும்பு இல்லாத சிக்கனை நன்றாக சுத்தம் செய்து சிறு துண்டுகளாக்கி இந்த மசாலாவில் ஊற வைத்து விடுங்கள். இந்த சிக்கன் இரண்டு மணி நேரம் வரை ஊறட்டும். இதனை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விடுங்கள்.  சிக்கன் எவ்வளவுக்கு எவ்வளவு ஊறுகிறதோ அப்போது தான் மசாலா சிக்கன் உள்ளே சென்று சிக்கன் ஜுசியாக இருக்கும்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் ஒரு கப் மைதா மாவு, 1/2 கப் சோள மாவு, ஒரு தேக்கரண்டி  மிளகாய் தூள், 1/2 தேக்கரண்டி மல்லி தூள், 1/2 தேக்கரண்டி சீரகத் தூள், 1/2 தேக்கரண்டி மிளகு தூள், தேவையான அளவு உப்பு போட்டு கலந்து கொள்ளுங்கள். தண்ணீர் எதுவும் ஊற்ற கூடாது. இப்போது நாம் ஊற வைத்த சிக்கனை எடுத்து மாவில் நன்றாக பிரட்டி கொள்ளுங்கள்.

முதல் கோட்டிங் லைட்டாக செய்தால் போதும். இரண்டாவது கோட்டிங்கை நன்றாக செய்து கொள்ளுங்கள். இந்த சிக்கனை பொரித்து எடுக்க கடாயில் எண்ணெய் ஊற்றி  அடுப்பில் வையுங்கள். எண்ணெய் மிதமான சூடை விட கொஞ்சம் அதிகமாக இருத்தல் வேண்டும். சிக்கன் துண்டுகளை போட்டு அது எல்லாப் பக்கங்களிலும் வெந்த பின்னர் எடுத்து விடலாம். ஒரே தடவையில் அதிகமாக போட்டு பொரிக்க வேண்டாம். அப்படி பொரித்தால் மொறு மொறுவென்று வராது. அவ்வளவு தான். ருசியான பாப்கார்ன் சிக்கன் தயார். 

Views: - 45

0

0