ஆஹா…இவ்வளவு சுவையாக இருக்குமா உருளைக்கிழங்கு சில்லி!!!

21 September 2020, 12:45 pm
Quick Share

இன்று ஒரு ருசியான மாலை நேர ஸ்னாக்ஸ் ரெசிபியை தான் பார்க்க போகிறோம். இதனை செய்ய கொஞ்சம் நேரம் எடுத்து கொண்டாலும் சுவை அட்டகாசமாக இருக்கும். இப்போது உருளைக்கிழங்கு சில்லி எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு- 400 கிராம்

அரிசி மாவு- 2 தேக்கரண்டி

சோள மாவு- 2 தேக்கரண்டி

மிளகாய் தூள்- 2 தேக்கரண்டி

கரம் மசாலா- 2 தேக்கரண்டி

மிளகு தூள்- 1/8 தேக்கரண்டி

சீரகத் தூள்- 1/2 தேக்கரண்டி

பெரிய வெங்காயம்- 2

கடுகு- 1/8 tbsp

இஞ்சி- ஒரு இன்ச்

பூண்டு- 3 பல்

பச்சை மிளகாய்- 2

காய்ந்த மிளகாய்- 2

கறிவேப்பிலை- 1 கொத்து

எண்ணெய்- பொரிக்க

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

உருளைக்கிழங்கு சில்லி செய்ய முதலில் 400 கிராம் அளவிற்கு உருளைக்கிழங்கு எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ளுங்கள். தோல் நீக்கி விட்டு அதனை மீடியம் அளவாக வெட்டி கொள்ளவும். இப்போது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்கும் போது வெட்டி வைத்த உருளைக்கிழங்கை போடவும்.

இது ஐந்து நிமிடங்கள் மட்டும் வெந்தால் போதும். உருளைக்கிழங்கு அதிகமாக வெந்து விட்டால் பொரிக்கும் போது மொறு மொறுவென்று வராது. அதனால் ஐந்து நிமிடங்கள் மட்டுமே வெந்தால் போதுமானது. தண்ணீரை வடிகட்டி உருளைக்கிழங்கை ஒரு பவுலில் போட்டு கொள்ளவும். இதனோடு இரண்டு தேக்கரண்டி அரிசி மாவு, இரண்டு தேக்கரண்டி சோள மாவு, ஒரு தேக்கரண்டி  மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி கரம் மசாலா, 1/8 தேக்கரண்டி மிளகு தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

தேவைப்பட்டால் மைதா மாவு கூட சேர்த்து கொள்ளலாம். கொஞ்சமாக தண்ணீர் தெளித்து உருளைக்கிழங்கோடு நாம் சேர்த்த மசாலா நன்றாக கோட் ஆகுமாறு கலந்து விடவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தீயை கொஞ்சம் அதிகமாக வைத்து கொள்ளவும். நாம் பிரட்டி வைத்த உருளைக்கிழங்கை எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்து கொள்ளுங்கள்.

அடுத்ததாக ஒரு கடாயில்  இரண்டு தேக்கரண்டி  எண்ணெய் ஊற்றி 1/8 தேக்கரண்டி கடுகு போடவும். கடுகு பொரிந்தவுடன் பொடியாக நறுக்கிய ஒரு இன்ச் அளவு இஞ்சி, மூன்று பல் பூண்டு, இரண்டு பச்சை மிளகாய், ஒரு கொத்து கருவேப்பிலை, இரண்டு காய்ந்த மிளகாய், இரண்டு நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். 

வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும். பிறகு 1/2 தேக்கரண்டி சீரகத் தூள், ஒரு தேக்கரண்டி கரம் மசாலா, ஒரு தேக்கரண்டி  மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு போட்டு கலந்து கொள்ளுங்கள். மசாலாவின் பச்சை வாசனை போன பிறகு நாம் பொரித்து வைத்த உருளைக்கிழங்கை போட்டு கிளறி விடவும்.

மசாலா உருளைக்கிழங்கோடு கோட் ஆகுமாறு வதக்கவும். தண்ணீர் எதுவும் ஊற்ற கூடாது. அவ்வளவு தான். ரொம்ப டேஸ்டான உருளைக்கிழங்கு சில்லி தயாராகி விட்டது.