எப்படி வைத்தாலும் ரசம் மட்டும் சொதப்பி விடுகிறதா…ஒரு முறை இப்படி வைத்து பாருங்கள்!!!

7 November 2020, 8:37 am
Quick Share

என்ன தான் பல விதமான குழம்பு வகைகள் இருந்தாலும் ரசம் என்பது தனித்துவம் வாய்ந்த ஒன்று. அனைத்தையும் சாப்பிட்டு விட்டு ரசம் ஊற்றி சாப்பிட்டால் தான் உணவு சாப்பிட்ட ஒரு திருப்தியே கிடைக்கும். இது திருப்திக்கு மட்டும் இல்லாமல் நாம் உண்ட உணவு ஜீரணம் ஆவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு ரசம் அவ்வளவு சூப்பராக வராது. எப்படி செய்தாலுமே சொதப்பி விடும். இனி கவலை வேண்டாம்… சூப் போல ஆசையாக எடுத்து எடுத்து குடிக்கும் அளவிற்கு ரசம் அசத்தலாக எப்படி வைப்பது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். 

தேவையான பொருட்கள்:

புளி- ஒரு நெல்லிக்காய் அளவு

மிளகு- 1 தேக்கரண்டி

சீரகம்- 1 ½ தேக்கரண்டி

வர மிளகாய்- 2

கடுகு- ½ தேக்கரண்டி

தக்காளி- 2

பூண்டு- 15 பற்கள்

கொத்தமல்லி தழை- சிறிதளவு

கறிவேப்பிலை- 2 கொத்து

உப்பு- தேவையான அளவு

எண்ணெய்- 3 தேக்கரண்டி

செய்முறை:

ரசம் செய்வதற்கு முதலில் ஒரு நெல்லிக்காய் அளவு புளியை தண்ணீரில் ஊற வைத்து கொள்ளவும். ஊறிய பின்னர் அதனை கரைத்து திப்பிகள் எதுவும் இல்லாமல் கரைத்து எடுத்து கொள்ளுங்கள். அடுத்து 1 1/2 தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி மிளகு, 1/4 தேக்கரண்டி கடுகு, இரண்டு வர மிளகாய் ஆகியவற்றை அம்மியில் நுணுக்கி எடுக்கவும். 

பதினைந்து பல் பூண்டினை தோலோடு எடுத்து நசுக்கி வையுங்கள். நன்றாக பழுத்த இரண்டு தக்காளி பழங்களை பிழிந்து வைத்து கொள்ளவும். ஒரு கையளவு கொத்தமல்லி தழையை நன்றாக கழுவி நறுக்கி வைக்கவும். இரண்டு கொத்து கறிவேப்பிலையையும் சுத்தம் செய்து நறுக்கி வையுங்கள். 

இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் பிழிந்து வைத்த தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கி வரும்போது நறுக்கி வைத்த கொத்தமல்லி தழைகளை சேர்க்கவும். பின்னர் நாம் நுணுக்கி வைத்த பொருட்களையும் பூண்டையும் சேர்த்து அவற்றின் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். 

பச்சை வாசனை நீங்கியதும் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்த்து தேவையான அளவு உப்பு போடவும். இது கொதி வரட்டும். ரசம் அதிகமாக கொதித்து விட்டால் நன்றாக இருக்காது. நுரை பொங்கி ஒரு கொதி வரும்போதே அடுப்பை அணைத்து விட வேண்டும். கடைசியில் ரசத்தை தாளிக்க ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி சிறிதளவு கடுகு, நறுக்கி வைத்த கறிவேப்பிலை ஆகியவை சேர்த்து போட்டு தாளித்து கொட்டவும். அவ்வளவு தான்… பத்தே நிமிடத்தில் ருசியான ரசம் தயார்.

Views: - 56

0

0

1 thought on “எப்படி வைத்தாலும் ரசம் மட்டும் சொதப்பி விடுகிறதா…ஒரு முறை இப்படி வைத்து பாருங்கள்!!!

Comments are closed.