ரவை இருந்தா போதும்… இந்த அருமையான இனிப்பு வகையை உங்கள் வீட்டிலே தயார் செய்து அசத்தலாம்!!!

6 August 2020, 7:00 pm
Quick Share

ரவா புட்டிங் கேள்விபட்டு இருக்கிறீர்களா…??? இன்று அதனை நம் வீட்டில் செய்து அனைவரையும் சந்தோஷப்படுத்துவோமா… வாருங்கள் ரவா புட்டிங் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

ரவா- 40 கிராம்

சர்க்கரை- 1 கப் (200 கிராம்)

பால்- 1/2 லிட்டர்

பட்டர்- 2 தேக்கரண்டி

முட்டை- 2

வெண்ணிலா எசன்ஸ்- 1 தேக்கரண்டி

செய்முறை:

ரவா புட்டிங்கிற்கு முதலில் காரமல்லை தயார் செய்து கொள்ளலாம். அதற்கு ஒரு பாத்திரத்தில் 1/2 கப் சர்க்கரை அதாவது 100 கிராம் போல சேர்த்து அதனுடன் 1/4 கப் மட்டும் தண்ணீர் ஊற்றவும். தண்ணீர் அதிகமாக ஊற்ற வேண்டாம். நன்றாக கலந்து விட்டு சர்க்கரை தேன் கலருக்கு மாறியதும் அடுப்பை அணைத்து காரமல்லை புட்டிங் செய்யப் போகும் பவுலில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றாத பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைக்கவும். பால் கொதிக்கும் போது  பாலோடு 1/2 கப் சர்க்கரை சேர்க்கவும். மேலும் இரண்டு தேக்கரண்டி  உப்பு இல்லாத வெண்ணெய் சேர்த்து கொள்ளவும். வெண்ணெய் கரைந்த பின்னர் 1/4 கப் ரவையயும் சேர்த்து விடலாம். ரவையை வறுக்க வேண்டிய அவசியம் இல்லை.

இது மிதமான சூட்டில் இரண்டில் இருந்து மூன்று நிமிடங்கள் வரை இருக்கட்டும். மூன்று நிமிடங்களில் ரவை வெந்த பிறகு அடுப்பை அணைத்து இதனை ஐந்து நிமிடங்கள் போல நன்றாக ஆற வைத்து கொள்ளவும். இதற்கு இடையில் ஒரு பாத்திரத்தில் இரண்டு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து கொள்ளவும்.

ரவை நன்றாக ஆறியதும் கொஞ்சம் கொஞ்சமாக  முட்டையோடு சேர்த்து கிளறவும். இந்த கலவையை புட்டிங் செய்யப் போகும் பவுலில் காரமல் மேல் ஊற்றி ஒரு மூடி போட்டு மூடிக் கொள்ளவும். ஒரு இட்லி பாத்திரத்தில் அடியில் தண்ணீர் ஊற்றி அதன் மேல் ஒரு ஸ்டான்டு வைத்து தயார் செய்து வைத்த புட்டிங் பவுலை ஸ்டான்டின் மேல் வைக்கவும்.

பவுலின் மேல் தண்ணீர் படும் அளவுக்கு தண்ணீர் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இட்லி பாத்திரத்தை மூடி 30 ல் இருந்து 35 நிமிடங்கள் வரை வேக வைத்து கொள்ளுங்கள். ஒரு கத்தி அல்லது குச்சி வைத்து புட்டிங் வெந்துவிட்டதா, ஒட்டாமல் வருகிறதா என்பதை அறியவும். 

புட்டிங் ஆறிய பின் அதனை ஒரு தட்டில் கவிழ்த்து போட்டு அதனை அலங்கரிக்க செரி அல்லது ராஸ்பெரி பழத்தை வைத்து வெட்டி எல்லோருக்கும் சந்தோஷமாக பறிமாறவும்.