தயிர் சாதத்துடன் இந்த தக்காளி ஊறுகாயை சாப்பிட்டு பார்த்து சொல்லுங்கள்!!!

20 March 2020, 9:26 pm
Quick Share

ஊறுகாய் என்றால் அனைவருக்கும் ரொம்ப பிடிக்கும். அதிலும் தக்காளி ஊறுகாய் மிகவும் ருசியாக இருக்கும். இது தயிர் சாதம், சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம் என்று அனைத்து வகை உணவுகளுக்கும் தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும். அதனை எவ்வாறு செய்வதென இப்போது பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

தக்காளி- 2 கிலோ

ஹிமாலயன் உப்பு- 1/2 கப்

புளி- 125 கிராம்

காய்ந்த மிளகாய்- 4

மிளகாய் தூள்- 1 கப்

வெந்தயம்- 4 தேக்கரண்டி

கடுகு- 3 தேக்கரண்டி

மஞ்சள் தூள்- 2 தேக்கரண்டி

பூண்டு- 1/2 கப்

உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி

கடலைப் பருப்பு- 1 தேக்கரண்டி

சீரகம்- 1 தேக்கரண்டி

நல்லெண்ணெய்- 1 கப்

பெருங்காயம்- ஒரு சிட்டிகை

கருவேப்பிலை- ஒரு கையளவு

செய்முறை:

தக்காளி ஊறுகாய் செய்வதற்கு முதலில் நமக்கு இரண்டு கிலோ ஃபிஷான தக்காளிகள் தேவை. தக்காளிகளை நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். அதனை ஒரு கிளாஸ் பாட்டில் அல்லது பீங்கான் ஜாரில் போட்டு விடுங்கள். கூடவே 1/2 கப் ஹிமாலயன் உப்பு மற்றும் இரண்டு தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து ஒரு ஈரம் இல்லாத கரண்டியால் கிளறி விடவும். ஹிமாலயன் உப்பு இல்லையென்றாலும் பரவாயில்லை. சாதாரண உப்பை கூட சேர்க்கலாம்.

இந்த தக்காளி உப்பில் 48 மணி நேரம் மூடி வைத்தபடி ஊற வேண்டும். மூன்றாவது நாள் அன்று தக்காளியை சுத்தமாக பிழிந்து ஒரு பெரிய தட்டில் போட்டு பரப்பிக் கொள்ளுங்கள். பிழிந்து கிடைத்த தண்ணீரை கீழே ஊற்றி விடாதீர்கள். அது ஜாரிலே இருக்கட்டும். தட்டில் உள்ள தக்காளி இரண்டில் இருந்து மூன்று நாட்களுக்கு வெயிலில் காய வையுங்கள்.

நன்றாக மொறு மொறுவென்று ஆகும் வரை தக்காளி காய வேண்டும். இதற்கு இடையில் 125 கிராம் புளியை நார் மற்றும் கொட்டைகளை நீக்கிய பிறகு தக்காளி சாறு உள்ள ஜாரில் போட்டு ஊற வைத்து விடுங்கள். தக்காளி காயும் நேரம் வரை புளியும் ஊறட்டும். தேவையான அளவு உப்பு அந்த தக்காளி சாற்றில் உள்ளதால் கெட்டு போகாமல் இருக்கும்.

இப்போது 4 தேக்கரண்டி வெந்தயம் மற்றும் இரண்டு தேக்கரண்டி கடுகை கடாயில் போட்டு ட்ரை ரோஸ்ட் செய்து பொடி செய்து கொள்ளுங்கள்.  புளி இரண்டு நாட்கள் ஊறிய பிறகு அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த புளி பேஸ்டோடு வெந்தயப் பொடி, கடுகு பொடி மற்றும் மொறு மொறுவென்று காய வைத்த தக்காளி அனைத்தையும் சேர்த்து கலந்து விடவும்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1/2 கப் நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்த பிறகு 1/2 கப் பூண்டை போட்டு வறுத்து எடுத்து கலந்து வைத்த தக்காளி புளியோடு சேர்க்கவும். அதே எண்ணெயில் ஒரு தேக்கரண்டி கடுகு, ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு, ஒரு தேக்கரண்டி உளுத்தம்பருப்பு, ஒரு சிட்டிகை பெருங்காயம் மற்றும் ஒரு கையளவு கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

தாளித்த பிறகு தக்காளியை அதில் கொட்டி இரண்டு நிமிடங்கள் மட்டும் அடுப்பில் இருக்க செய்து பின் அடுப்பை அணைத்து விடலாம். சுவையான தக்காளி ஊறுகாய் தயார்.