டீ டைம் ஸ்நாக்ஸ்: ஒரு கப் டீயோடு சுட சுட சிக்கன் மோமோஸ்!!!

12 January 2021, 9:24 pm
Quick Share

குளிர் காலத்தின் மாலை நேரத்தில் சூடான டீயோடு, சுட சுட ஸ்நாக்ஸ் செய்து சாப்பிடும் சுகமே தனி தான். இப்படி தினமும் ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொண்டே இருந்தால் இன்று என்ன செய்வது என்ற குழப்பம் நிச்சயமாக வந்துவிடும். எனவே புதிதாக ஏதாவது ஒரு ரெசிபி செய்து சாப்பிட வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருந்தால் இந்த சிக்கன் மோமோஸை ஒரு முறை டிரை பண்ணி பாருங்க…

தேவையான பொருட்கள்:

மைதா மாவு- 130 கிராம்

சிக்கன்- 250 கிராம்

பெரிய வெங்காயம்- 1

கேரட்- 1

முட்டை கோஸ்- 1/2 கப்

இஞ்சி- ஒரு இன்ச் அளவு

பூண்டு- 3 பல்

மிளகாய் தூள்- 1/2 தேக்கரண்டி

மிளகு தூள்- 1/2 தேக்கரண்டி

நல்லெண்ணெய்- 2 தேக்கரண்டி

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

சிக்கன் மோமோஸ் செய்வதற்கு முதலில் வெளியில் இருக்கக் கூடிய மாவை தயார் செய்து கொள்ளலாம். அதற்கு ஒரு மிக்ஸிங் பவுலில் ஒரு கப் மைதா மாவை எடுத்துக் கொள்ளுங்கள். மாவிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு மாவை பிசைந்து  கொள்ளவும். கெட்டியாக இல்லாமல் சாஃப்டாக பிசைந்து கொள்ளுங்கள். அதே போல் கைகளிலும் ஒட்டாமல் பார்த்து கொள்ளுங்கள்.

மாவை நன்றாக பிசைந்த பிறகு ஒரு துணி போட்டு மூடி வைத்து விடலாம். அடுத்ததாக  மோமோஸ் உள்ளே வைக்கக் கூடிய பூரணத்தை செய்து கொள்ளலாம். அதற்கு 250 கிராம் எலும்பு இல்லாத சிக்கனை எடுத்துக் கொள்ளுங்கள். சிக்கனை நன்றாக சுத்தம் செய்து அலசிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து கொள்ளலாம்.

இப்போது ஒரு மிக்ஸிங் பவுலில் நாம் அரைத்து வைத்த சிக்கன், பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், 1/2 கப் முட்டை கோஸ், ஒரு துருவிய கேரட், ஒரு துண்டு நறுக்கிய இஞ்சி, மூன்று பல் பூண்டு, 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள், 1/4 தேக்கரண்டி  மிளகு தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். கொஞ்சமாக தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளுங்கள். 

அடுத்து நாம் பிசைந்து வைத்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி மெலிசாக சப்பாத்தி கட்டையைக் கொண்டு விரித்து கொள்ளுங்கள். விரித்த பிறகு நாம் தயார் செய்து வைத்த பூரணத்தை உள்ளே வைத்து மடிப்புகள் வருமாறு மடித்து மோமோஸ் போல் அழுத்தி கொள்ளுங்கள். பிறகு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஆவி வந்த பிறகு மோமோசை இட்லி தட்டில் வைத்து உள்ளே வைக்கவும்.

இந்த சிக்கன் மோமோஸ் வேக பதினைந்தில் இருந்து இருபது நிமிடங்கள் வரை ஆகும். இந்த மோமோஸுக்கு  தொட்டு சாப்பிட தக்காளி, மற்றும் காய்ந்த மிளகாயை தண்ணீரில் போட்டு பதினைந்து நிமிடங்கள் வேக வையுங்கள். பதினைந்து நிமிடங்கள் கழித்து தக்காளியின் தோலை நீக்கி விட்டு தக்காளி, மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து கொள்ளுங்கள். இந்த காரசாரமான சட்னியோடு சிக்கன் மோமோஸை  அனைவரும் சாப்பிட்டு மகிழலாம்.