ரோட்டுக்கடைகளில் விற்கப்படும் காளான் சுவை கொஞ்சம் கூட மாறாமல் செய்யலாம் வாங்க….!!!

25 September 2020, 7:48 pm
Quick Share

நம்ம எல்லாருக்கும் ரொம்ப பிடித்த ரோடு சைடுகளில் விற்கப்படும் காளான் செய்முறையை தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம். நம் வீட்டிலேயே இதனை செய்யப் போவதால் சாஸ் எதுவும் சேர்க்காமல் வீட்டில் இருக்கக் கூடிய மசாலாவை வைத்து கொண்டு சமைக்க போகிறோம். மேலும் கடைகளில் சாப்பிடும் போது காளானை மென்று சாப்பிடும் உணர்வு நமக்கு பெரிதும் ஏற்படாது. அதனால் நாம் காளான் மற்றும் முட்டை கோஸை சம அளவு சேர்க்கப் போகிறோம்.

தேவையான பொருட்கள்: 

காளான்- 200கிராம்

முட்டை கோஸ்- 200கிராம்

மைதா-1 கப்

சோள மாவு- 1/4 கப்

காஷ்மீரி மிளகாய் தூள்-1தேக்கரண்டி

கரம் மசாலா-1தேக்கரண்டி

வெங்காயம்-2

தக்காளி-3

இஞ்சி பூண்டு விழுது-1தேக்கரண்டி

பச்சை மிளகாய்-2

மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி

மிளகாய் தூள்-2 தேக்கரண்டி

தனியா தூள்-1தேக்கரண்டி

எண்ணெய்-பொரிக்க&தாளிக்க

உப்பு- தேவையான அளவு

கறிவேப்பிலை-1கொத்து

மல்லி தழை-சிறிதளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் சம அளவு காளான் மற்றும் முட்டை கோஸை எடுத்துக் கொள்ளுங்கள். இதனை நன்றாக அலசி எடுத்துக் வையுங்கள். இதனோடு ஒரு கப் மைதா சேர்த்து நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளுங்கள். மைதா மாவு பிடிக்காதவர்கள் தாராளமாக கோதுமை மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். ஆனால் கடைகளில் விற்கப்படும் காளான் சுவை கிடைக்காது.நாம் காளானையும் முட்டை கோஸையும் அலசியதில் ஏற்கனவே ஈரப்பதம் இருக்கும். அதனால் இதனை பிசைய மேற்கொண்டு தண்ணீர் ஊற்ற தேவை இல்லை.

பிசைந்து வைத்த கலவையோடு கால் கப் சோள மாவு,ஒரு தேக்கரண்டி  காஷ்மீரி மிளகாய் தூள்,ஒரு தேக்கரண்டி கரம் மசாலா,தேவையான அளவு உப்பு போட்டு கலந்து கொள்ளுங்கள். இப்போது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றுங்கள். எண்ணெய் காய்ந்த பிறகு நாம் பிசைந்து வைத்த கலவையை ரொம்ப பெரியதாக இல்லாமல் மீடியம் சைசாக ஒன்று ஒன்றாக போட்டு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது ஒரு வாணலியில் இரண்டு தேக்கரண்டி  எண்ணெய் ஊற்றி அதில் பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்பு மூன்று தக்காளியை நன்றாக அரைத்து அதனையும் சேர்த்து வதக்கி விடுங்கள். 

இரண்டு நிமிடங்கள் கழித்து 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்,1/2 தேக்கரண்டி கரம் மசாலா,1 தேக்கரண்டி தனியா தூள்,2 தேக்கரண்டி மிளகாய் தூள்,தேவையான அளவு உப்பு போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பச்சை வாசனை போன பின் ஒரு தேக்கரண்டி சோள மாவை ஒரு கப் தண்ணீரில் போட்டு கரைத்து அதனையும் சேர்க்கவும். இது காளான் கெட்டியாக உதவி செய்யும்.

இப்போது இதனை ஒரு ஐந்தில் இருந்து ஆறு நிமிடங்கள் வரை குறைந்த தீயில் வைத்து கொதிக்க வைக்கவும். ஆறு நிமிடங்கள் ஆன பிறகு காளானை சுவைத்துப் பாருங்கள். புளிப்பு இன்னும் வேண்டும் என்று நினைத்தால் அரை மூடி எலுமிச்சை சாற்றை பிழிந்து ஊற்றவும். இறுதியாக அடுப்பை அணைத்து விட்டு சிறிதளவு நறுக்கிய வெங்காயம்,கொத்தமல்லி தழை சேர்த்தால் செம டேஸ்ட்டான காளான் தயார்.