சளித் தொல்லையை ஒரே நாளில் போக்கும் மண மணக்கும் தூதுவளை ரசம்!!!

5 April 2021, 11:00 am
Quick Share

தூதுவளை ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு மூலிகையாகும். இது சளி, இருமல், சைனஸ், மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல் மற்றும் நெஞ்சு சளி போன்ற பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வு. மேலும் சுவாச கோளாறுகள் உள்ளவர்களுக்கு தூதுவளை ஒரு அற்புதமான மருந்து. இத்தகைய நன்மை பயக்கும் தூதுவளையை துவையல், சூப், ரசம் என  பல வகைகளில் நாம் உண்ணலாம். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது தூதுவளை ரசம். இப்போது தூதுவளை ரசம் எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

தூதுவளை இலைகள் – 1 கையளவு

நெய் – 1 கரண்டி 

புளி – ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு

தக்காளி – 2 

மிளகு – 1 கரண்டி

சீரகம் – 1 கரண்டி

பூண்டு – 3 பல்

சாம்பார் பொடி – 3/4 கரண்டி

மஞ்சள் தூள் – 1/4 கரண்டி

கறிவேப்பிலை – ஒரு கொத்து 

உப்பு – சுவைக்கேற்ப

தாளிக்க:-

கடுகு – 1 கரண்டி

சீரகம் – 1 கரண்டி

நெய் – 1 கரண்டி

செய்முறை:

*ரசம் செய்வதற்கு முதலில் தூதுவளை இலைகளை சுத்தம் செய்து கொள்ளவும்.

*புளியை சூடான நீரில் ஊற வைத்து கரைசலை தனியாக எடுத்து வைக்கவும்.

*ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு கரண்டி நெய் விட்டு தூதுவளை இலைகளை போட்டு லேசாக வதக்கவும்.

*வதக்கிய இலைகளை தனியாக எடுத்து வையுங்கள்.

*மிளகு, சீரகம், பூண்டு மற்றும் வதக்கிய தூதுவளை இலைகளை போட்டு அரைத்து எடுக்கவும்.

*ஒரு அகலமான பாத்திரத்தில் புளி கரைசல், மஞ்சள் தூள், சாம்பார் பொடி, தக்காளி, கறிவேப்பிலை, அரைத்த விழுது மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

*இதனை அடுப்பில் வைத்து ஒரு கொதி வர விடவும்.

*பிறகு அடுப்பை சிம்மில் வைத்து பத்து நிமிடங்கள் கொதிக்க வையுங்கள்.

*பத்து நிமிடங்கள் கழித்து 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி ரசம் நுரைக்க ஆரம்பிக்கும் வரை கொதிக்கட்டும்.

*கடைசியில் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

*ஒரு சிறிய வாணலியில் நெய் விட்டு தாளிக்க கொடுத்த பொருட்களை சேர்த்து தாளித்து ரசத்தில் கொட்டவும்.

*அவ்வளவு தான்… ஆரோக்கியமான தூதுவளை ரசம் இப்போது தயார்.

Views: - 3

0

0