இன்றைய தேநீர் நேர தின்பண்டம்…. உருளைக்கிழங்கு போண்டா!!!

24 September 2020, 2:00 pm
Quick Share

இன்றைய ஸ்பெஷல் நாம் பார்க்க இருப்பது மொறு மொறு உருளைக்கிழங்கு போண்டா. இது தேநீர் அல்லது காபியுடன் சாப்பிட ஒரு அட்டகாசமான ஸ்னாக்ஸ். இந்த ருசியான உருளைக்கிழங்கு போண்டா எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு- 5

பெரிய வெங்காயம்- 1

பச்சை மிளகாய்- 2

இஞ்சி- ஒரு துண்டு

மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள்- ஒரு தேக்கரண்டி

கடுகு- ஒரு தேக்கரண்டி

சீரகம்- ஒரு தேக்கரண்டி

கடலை மாவு- 1 கப்

அரிசி மாவு- 2 தேக்கரண்டி

உப்பு- தேவைக்கேற்ப

எண்ணெய்- பொரிக்க தேவையான அளவு

கொத்தமல்லி தழை- சிறிதளவு

செய்முறை:

உருளைக்கிழங்கு போண்டா செய்ய முதலில் உருளைக்கிழங்கு மசாலா தயாரிக்க வேண்டும். அதற்கு ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி ஒரு தேக்கரண்டி கடுகு, ஒரு தேக்கரண்டி சீரகம் போடவும். கடுகு பொரிந்தவுடன் ஒரு நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய 2 பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து வதக்கவும். 

இதனுடன் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி உபதேசம் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும். பிறகு ஐந்து உருளைக்கிழங்கை வேக வைத்து சிறிய துண்டுகளாக மசித்து சேர்த்து கொள்ளவும். இரண்டு நிமிடங்கள் வதக்கிய பின் நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடலாம்.

இப்போது போண்டா மாவு செய்ய ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் கடலை மாவு, 2 தேக்கரண்டி அரிசி மாவு, 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், 1/2 தேக்கரண்டி உப்பு ஆகியவை சேர்த்து கலக்கவும். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மாவை தயார் நிலையில் வையுங்கள். 

போண்டா பொரிக்க தேவையான அளவு எண்ணெயை கடாயில் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் உருளைக்கிழங்கு மசாலாவை உருண்டைகளாக உருட்டி மாவில் முக்கி எண்ணெயில் போடவும். எல்லா பக்கத்திலும் பொன்னிறமாக மாறியதும் சூடாக எடுத்து பரிமாறவும்.