காரசாரமான நண்டு மிளகு மசாலா இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!!

7 August 2020, 12:00 pm
Quick Share

சிக்கன், மட்டன் போன்ற இறைச்சிகளை போல நண்டு அடிக்கடி செய்யப்படும் உணவு வகை அல்ல. ஆனால் என்றைக்காவது செய்யும் ரெசிபியை அசத்தலாக செய்ய வேண்டாமா…??? இன்றைக்கு சூப்பரான நண்டு மிளகு மசாலா செய்யலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

நண்டு- 400 கிராம்

வெங்காயம்- 4

தக்காளி- 1

மிளகு- 2 தேக்கரண்டி

சீரகம்- 1/2 தேக்கரண்டி

சோம்பு- 1/2 தேக்கரண்டி

பூண்டு- 10 பல்

இஞ்சி- ஒரு துண்டு

மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி

மிளகாய் தூள்- 2 தேக்கரண்டி

தனியா தூள்- 2 தேக்கரண்டி

பச்சை மிளகாய்- 2

நல்லெண்ணெய்- 2 தேக்கரண்டி

கறிவேப்பிலை- 2 கொத்து

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

நண்டு மிளகு மசாலா செய்வதற்கு முதலில் நாம் ஒரு மசாலாவை தயார் செய்ய வேண்டும். அதற்கு ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டு தேக்கரண்டி மிளகு, 1/2 தேக்கரண்டி சீரகம், 1/2 தேக்கரண்டி சோம்பு, 10 பல் பூண்டு, ஒரு துண்டு இஞ்சி சேர்த்து முதலில் தண்ணீர் எதுவும் ஊற்றாமல் அரைத்து கொள்ளவும். பிறகு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுதாக அரைக்கவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றவும். உங்களிடம் தேங்காய் எண்ணெய் இருந்தால் அதனையும் பயன்படுத்தி கொள்ளலாம். எண்ணெய் சூடானதும் நான்கு நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். கூடவே இரண்டு பச்சை மிளகாய் மற்றும் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து வதக்குங்கள்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அரைத்து வைத்த மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும். இந்த சமயத்தில் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், 2 தேக்கரண்டி மிளகாய் தூள், 2 தேக்கரண்டி தனியா தூள் மற்றும் ஒரு நறுக்கிய தக்காளி போட்டு வதக்கவும். 

ஐந்து நிமிடங்கள் வதக்கிய பின் 400 கிராம் சுத்தம் செய்த நண்டு சேர்த்து கொள்ளவும். 1/2 கப் தண்ணீர் ஊற்றி மூடி வைத்து பத்து நிமிடங்கள் மிதமான சூட்டில் கொதிக்க விடவும். கடைசியில் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைத்து விடலாம்.

Views: - 22

0

0