இதுவரை இப்படி ஒரு வாழைக்காய் வறுவலை நீங்கள் சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க!!!

17 October 2020, 8:57 am
Quick Share

இன்றைக்கு நாம் பார்க்க இருக்கும் வாழைக்காய் வறுவல் மாதிரி ஒரு ரெசிபியை நிச்சயமாக நீங்கள் ருசித்திருக்க மாட்டீர்கள். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இந்த எளிமையான ரெசிபியை செய்து விடலாம். வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு இது சுவையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் போன்ற எந்த வகையான உணவுகளுக்கும் இது ஒரு மிகச்சிறந்த சைடு டிஷ். இப்போது இந்த செட்டிநாடு ஸ்டைல் வாழைக்காய் வறுவல் எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

வாழைக்காய்- 2

பெரிய வெங்காயம்- 1

தக்காளி- 1

பச்சை மிளகாய்- 2 

பூண்டு- 10 பல்

சோம்பு- 1 தேக்கரண்டி

சீரகம்- 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள்- 1/2 தேக்கரண்டி

மிளகுத்தூள்- 1/4 தேக்கரண்டி

சீரகத்தூள்- 1/2 தேக்கரண்டி

கரம் மசாலா- 1/4 தேக்கரண்டி

பெருங்காய பொடி- 1/4 தேக்கரண்டி

கறிவேப்பிலை- ஒரு கொத்து

எண்ணெய்- 4 தேக்கரண்டி

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

வாழைக்காய் வறுவல் செய்வதற்கு இரண்டு வாழைக்காயை தோல் சீவி நறுக்கி தண்ணீரில் போட்டு கொள்ளுங்கள். ஒரு கடாயை சூடாக்கி அதில் நான்கு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கொள்ளவும். தண்ணீரில் வெட்டி வைத்துள்ள வாழைக்காய் துண்டுகளை சேர்க்கவும். இதனோடு 1/4 தேக்கரண்டி உப்பு மற்றும் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து வாழைக்காயை இரண்டில் இருந்து மூன்று நிமிடங்கள் வறுக்கவும். 

வாழைக்காய் முழுவதுமாக வெந்து சிப்ஸ் போல மொறு மொறுவென்று ஆகாமல் முக்கால் பாகம் வெந்தால் போதுமானது. இப்போது வறுத்த வாழைக்காய் துண்டுகளை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ளலாம். அடுத்து அதே கடாயில் மீந்திருக்கும் எண்ணெயில் ஒரு தேக்கரண்டி சோம்பு, 1/2 தேக்கரண்டி சீரகம், பொடியாக நறுக்கிய ஒரு கொத்து கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய 10 பல் பூண்டு ஆகியவற்றை சேர்த்து கொள்ளவும். 

பொருட்கள் பொரிந்தவுடன், பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பொருட்கள் அனைத்தும் நன்றாக வறுபடும் வரை காத்திருக்கவும். அடுத்ததாக 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள், 1/2 தேக்கரண்டி சீரகத்தூள், 1/4 தேக்கரண்டி மிளகுத்தூள், 1/4 தேக்கரண்டி கரம் மசாலா, 1/4 தேக்கரண்டி பெருங்காய பொடி ஆகிய பொருட்களை சேர்த்து ஒரு நிமிடம் வறுக்கவும். 

கடைசியில் பொடிசாக நறுக்கிய ஒரு தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும். வாழைக்காய் வறுவலுக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளுங்கள். தக்காளியின் பச்சை வாசனை போன பிறகு வாழைக்காயை சேர்க்கவும். இதனை மிதமான தீயில் 2 – 3 நிமிடங்கள் மட்டும் வறுத்து அடுப்பை அணைத்தால் ருசியான செட்டிநாடு ஸ்டைல் வாழைக்காய் வறுவல் தயார்.

Leave a Reply