கிராமத்து கைபக்குவம் மாறாமல் கம கம ஆட்டுக்கறி ரசம்!!!

11 November 2020, 10:30 am
Quick Share

கர்ப காலத்தின் போது ஒரு  பெண்ணின் உடலில் பல மாற்றங்களும் அசௌகரியங்களும்  ஏற்படும். அதில் முக்கியமான ஒன்று இரத்த சோகை. இதற்கு அலோபதியில் தற்போது பல மருந்து மற்றும் மாத்திரைகள் தரப்பட்டாலும் அந்த காலத்தில் கிராமத்தில் உணவு தான் மருந்தாக கொடுக்கப்பட்டது. அப்படி இரத்த சோகை ஏற்படாமல் இருக்க கர்ப்பிணி பெண்களுக்கு அடிக்கடி ஆட்டுக்கறியில் ரசம் வைத்து கொடுப்பது வழக்கம். ஆட்டு இறைச்சியில் உள்ள இரும்பு சத்தானது ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து உடலில் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். இன்று கிராமத்து முறைப்படி ஆட்டுக்கறி ரசம் எப்படி வைப்பது என பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்:

ஆட்டுக்கறி- 1/4 கிலோ

பட்டை- 1

கிராம்பு- 2

இஞ்சி பூண்டு விழுது- 1 தேக்கரண்டி

மிளகுத்தூள்- 1 தேக்கரண்டி

சீரகம்- 1 தேக்கரண்டி

சோம்பு- 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள்- 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை- ஒரு கொத்து

பூண்டு- 4 பற்கள்

காய்ந்த மிளகாய்- 2

வெங்காயம்- 1

தக்காளி- 1

புளி- ஒரு நெல்லிக்காய் அளவு

நல்லெண்ணெய்- தேவையான அளவு

உப்பு- சுவைக்கு ஏற்ப

கொத்தமல்லி தழை- சிறிதளவு

செய்முறை:

ஆட்டுக்கறி ரசம் செய்வதற்கு முதலில் கறியை நன்றாக கழுவி சுத்தம் செய்து அதனை ஒரு குக்கரில் போட்டு கொள்ளுங்கள். இதனோடு மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, சீரகம், கொத்தமல்லி தழை மற்றும் உப்பு சேர்த்து மூடி 7 – 8 விசில் வர விடவும். 

இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, சோம்பு, சீரகம், காய்ந்த மிளகாய், மிளகுத்தூள், காய்ந்த மிளகாய் ஆகியவை சேர்த்து தாளிக்கவும். அடுத்து ஒரு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். 

வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் தக்காளி மற்றும் நான்கு பூண்டு பற்களை  சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியவுடன் புளி கரைசலை ஊற்றவும். இந்த சமயத்தில் கறி வேக வைத்த தண்ணீரை மட்டும் இதில் ஊற்றி கொள்ளலாம். இது ஒரு கொதி வந்த பின் கறிவேப்பிலை போட்டு அடுப்பை அணைத்து விடலாம். இதனை பரிமாறும் சமயத்தில் கறித்துண்டுகளை சேர்த்து பரிமாறவும். அல்லது அதனை தனியாக வறுவலாகவும் செய்து சாப்பிடலாம்.

Views: - 36

0

0

1 thought on “கிராமத்து கைபக்குவம் மாறாமல் கம கம ஆட்டுக்கறி ரசம்!!!

Comments are closed.