இனி கடைகளுக்கு ஏன் செல்ல வேண்டும்…நம்ம வீட்டு குழந்தைகளுக்கு நாமே செய்து கொடுக்கலாம் ருசியான ஐஸ்கிரீம்!!!

21 August 2020, 5:16 pm
Quick Share

குழந்தைகள் இருந்து பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பமான ஐஸ்கிரீமின் செய்முறையை  தான் இன்று நாம் பார்க்க  போகிறோம். ஐஸ்கிரீமை மூன்று விதமாக செய்யலாம். ஒன்று முட்டை சேர்த்து செய்யலாம், இரண்டு கஸ்டர்டு பவுடர் சேர்த்து செய்யலாம், மூன்றாவதாக கிரீம் மற்றும் கண்டன்ஸ்டு மில்க் கொண்டு செய்யலாம். கிரீம் அவ்வளவு சுலபமாக கிடைக்காது என்பதால் நாம் இன்று பால் கொண்டு செய்யப் போகிறோம்.

தேவையான பொருட்கள்:

பால்- 1 லிட்டர்

முட்டை- 3

சர்க்கரை- 3/4 கப்

வெண்ணெய்- 2 தேக்கரண்டி 

வெண்ணிலா எசன்ஸ்- 1 தேக்கரண்டி

நெய்- 1 தேக்கரண்டி

முந்திரி பருப்பு- 15

செய்முறை:

ஐஸ்கிரீம் செய்ய முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றாத பாலை சேர்க்கவும். இதனை மிதமான சூட்டில் வைத்து காய்ச்சவும். இது அரை லிட்டராக சுண்டி வரும் வரை காய்ச்சவும். அப்பப்போ ஒரு கரண்டியால் கிண்டி விடவும். இல்லையென்றால் அடி பிடித்து விடும். இது பாதி அளவு வர கிட்டத்தட்ட முப்பத்து ஐந்து நிமிடங்களில் இருந்து நாற்பத்தி ஐந்து நிமிடங்கள் வரை ஆகும்.

பால் சுண்டியதும் அடுப்பை அணைத்து விடலாம். இப்போது ஒரு பவுலில் மூன்று முட்டையினுடைய மஞ்சள் கருவை எடுத்து அதனோடு 3/4 கப் சர்க்கரை சேர்த்து லேசான மஞ்சள் நிறம் வரும் வரை கிளறவும். லேசான மஞ்சள் நிறம் வந்த பின் சுண்டக் காய்ச்சிய பாலில் பாதி அளவு மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக  சேர்த்து கலந்து விடவும்.

இப்போது மீதம் இருக்கக் கூடிய பாலில் இரண்டு தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து நாம் கலந்து வைத்த முட்டை பாலையும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறி  கொள்ளவும். பிறகு அடுப்பை பற்ற வைத்து மிதமான சூட்டில் இந்த பாத்திரத்தை வைக்கலாம். இது கெட்டியாக ஆகும் வரை சூடாகட்டும். ஏழில் இருந்து எட்டு நிமிடங்களில் கெட்டியாகிவிடும். 

கெட்டியான பிறகு அடுப்பை அணைத்து விட்டு ஒரு தேக்கரண்டி வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து இதனை ஒரு காற்று உள்ளே போகாத ஏர் டைட் கண்டைனரில் ஊற்றி ஃபிரீசரில் மூன்று மணி நேரம் வைக்கவும். மூன்று மணி நேரம் கழித்து அதனை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து கொள்ளவும். இதே போல் மொத்தமாக நான்கு முறை ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்கும் ஃபிரீசரில் வைத்து அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

கெட்டியாக இருக்கும் போது இரண்டு முறையாக போட்டு அரைக்கவும். ஒரு கடாயில்  ஒரு தேக்கரண்டி நெய் விட்டு பதினைந்து முந்திரி பருப்பை சிறு சிறு துண்டுகளாக உடைத்து போட்டு வறுக்கவும். இதனுடன் இரண்டு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து முந்திரி பருப்பு பொன்னிறம் ஆகும் வரை வறுத்து கொள்ளவும். 

நான்காவது முறை ஐஸ்கிரீமை ஃபிரீசரில் வைக்கும் முன்பு இந்த முந்திரி பருப்பையும் சேர்த்து கலந்து வைத்து விடலாம். மூன்று மணி நேரம் கழித்து வெளியில் எடுத்து அனைவருக்கும் பரிமாறவும்.

Views: - 35

0

0