விடியல் ஆட்சியிலும் தொடரும் சென்னை பூர்வகுடிகள் மீதான அடக்குமுறை : முதியவர் தீக்குளிப்பு சம்பவத்திற்கு இயக்குநர் பா.இரஞ்சித் கண்டனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 May 2022, 1:47 pm
Pa Ranjith - Updatenews360
Quick Share

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்த சாமி நகர் இளங்கோ தெரு பகுதியில் கடந்த 29ஆம் தேதி முதல் நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆக்கிரமிப்புகளில் அமைந்துள்ள வீடுகளை இடிக்க நீதிமன்றம் உத்தரவு அளித்தும், பொதுமக்கள் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று கண்ணையர் என்ற முதியவரின் வீட்டை அகற்ற பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டனர்.

அப்போது தனது வீட்டை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த அவர், உடலில் மண்ணென்ணை ஊற்றி தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்கள் மற்றும் இளைஞர்கள் முதியவரை மீட்டனர்.

சுமார் 40% தீக்காயங்களுடன் பாதிக்கப்பட்ட முதியவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள் அரசு வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதால் பொதுப்பணித்துறை ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை நிறுத்தியுள்ளனர்.

தொடர்ந்து மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளதால் தற்காலிகமாக பணியை நிறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் முதியவர் தீக்குளித்த சம்பவத்திற்கு தமிழக அரசுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக இயக்குநர் பா.இரஞ்சித் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், விடியல் ஆட்சியிலும், தொடரும் சென்னை பூர்வகுடிகள் மீதான அடக்குமுறை! நீதி மன்ற உத்தரவு இம்மக்களுக்கு மட்டும் தானா?? மாற்று திட்டம் என்பது சென்னையை விட்டு வெளியேற்றுவது மட்டும் தானா? இம்மக்களின் உரிமையை, உணர்வை, கோரிக்கையை எப்போது யோசிக்க, மதிக்க தொடங்குவீர்கள் தமிழக அரசே? என கேள்வி எழுப்பியுள்ளார்.

நீதிமன்றம் உத்தரவு பூர்வகுடிகள் மீதுதானா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இயக்குநரின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.

Views: - 551

0

0