‘போட்டுத் தள்ளிடுவேன்’… பேருந்தில் பயணிகளை மிரட்டிய அரசுப் பேருந்து நடத்துநர் ; வைரலாகும் ஷாக் வீடியோ..!!

Author: Babu Lakshmanan
4 October 2023, 7:48 pm
Quick Share

நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் தமிழ்நாடு அரசு பேருந்து நடத்துனர் பயணிகளிடம் ஒருமையில் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா சேரம்பாடி பகுதி அதிக அளவில் காட்டு யானைகளும், வனவிலங்குகளும் சாலையோரம் அதிகமாக உலா வரும் பகுதியாகும். இந்த நிலையில், உதகையில் இருந்து கள்ளிக்கோட்டை செல்லும் பேருந்தில் மாணவிகள் பயணம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. சேரம்பாடி காபிக்காடு என்ற பேருந்து நிறுத்தத்தில் தங்களை இறக்கி விடுமாறு பள்ளி மாணவிகள் நடத்துனரிடம் கேட்டுள்ளார்.

அதற்கு நடத்துனரோ, ‘இது எக்ஸ்பிரஸ் பஸ் இங்கெல்லாம் நிறுத்த முடியாது,’ என்று கூறியுள்ளார். அதனை பேருந்தில் பயணித்த பயணிகள் தட்டி கேட்ட போது, பயணிகளை நடத்துனர் ஒருமையில் மோசமான வார்த்தையில் வசைப்பாடி, அராஜகமாக மக்களை பயமுறுத்தும் விதமாக நடந்து கொண்டு போட்டுத் தள்ளி விடுவேன், என்று மிரட்டியுள்ளார்.

தற்போது இந்த காட்சியை பேருந்தில் பயணித்த மற்றொரு பயணி தனது கைப்பேசி மூலம் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாகி வரும் நிலையில், இவர் நடத்துனர் தானா அல்லது ரவுடி கும்பலின் தலைவனா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அரசு ஊழியர்கள் பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும், மேலும் இது போன்ற அராஜகத்தில் ஈடுபடும் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் மீது நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வருங்காலத்தில் இது போன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த நடத்துனர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுத்து அரசு பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது, இந்த வீடியோவானது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Views: - 1269

1

0