தமிழக அரசு கொடுத்த உரையில் பெரும்பாலும் பொய்… பதவிக்கான கண்ணியத்தை இழந்து விட்டார் சபாநாயகர் ; ஆளுநர் மாளிகை விளக்கம்..!!

Author: Babu Lakshmanan
12 February 2024, 3:37 pm
Quick Share

அரசின் சாதனைகளை பிரதிபலிப்பதற்கு பதில் தவறான கருத்துக்கள் ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்தாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

இந்தாண்டுக்கான முதல் கூட்டம் என்பதால் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தமிழில் பேசி தனது உரையை தொடங்கிய ஆளுநர் அரசு தயாரித்து கொடுத்த உரையை முழுவதும் படிக்காமல், அதில் குறிப்பிட்டிருந்த திருக்குறளை மேற்கொள்காட்டி வெறும் 4 நிமிடங்களை உரையை வாசித்து விட்டு அமர்ந்தார்.

தமக்கு அளிக்கப்பட்டுள்ள உரையில் உள்ள கருத்துக்களுடன் முரண்படுவதாகவும், அரசு தயாரித்த உரையை படிப்பது அரசியல் சாசனத்தை ஏளனம் செய்வது போல் அமையும் என்று கூறிய ஆளுநர் ஆர்என் ரவி, அரச தயாரித்த உரையின் உண்மைத் தன்மை மற்றும் நெறிகளுடன் தமக்கு மாறுபட்ட கருத்துக்கள் உள்ளதாகக் கூறினார். மேலும், தேசிய கீதத்தை நிகழ்ச்சியின் தொடக்கத்திலும், இறுதியிலும் இசைக்க வேண்டும் என பலமுறை கூறியதாகவும், ஆனால், அதனை நடைமுறைப்படுத்தது கண்டனத்திற்குரியது என்றும் அவர் தெரிவித்தார். இறுதியில், வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரம், ஜெய்ஹிந்த் எனக் கூறி ஆளுநர் உரையை முடித்தார்.

மேலும், அவை முன்னவர் துரைமுருகன் பேச தொடங்கிய போது, தேசிய கீதம் வாசிக்கப்படும் முன்பு அவையில் இருந்து ஆளுநர் ஆர்என் ரவி வெளியேறினார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஆளுநர் ஆர்என் ரவி மரபுகளை மீறி செயல்பட்டதாக ஆளும் கட்சியினர் குற்றம்சாட்டினர். அதேவேளையில், ஆளுநர் மரபுகளை கடைபிடித்ததாகவும், சபாநாயகர் தான் விதிகளை மீறி பேசியதாகவும் பாஜக தெரிவித்தது.

இந்த நிலையில், அரசின் சாதனைகளை பிரதிபலிப்பதற்கு பதில் தவறான கருத்துக்கள் ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்தாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- அரசு தயாரித்த ஆளுநர் உரையில் உண்மைக்கு புறம்பான பல பத்திகள் இருந்தன. தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்ததால் தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்கவில்லை.
அரசின் சாதனைகளை பிரதிபலிப்பதற்கு பதில் தவறான கருத்துக்கள் ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்தன.

சபாநாயகரின் செயல்பாடு அவரது பதவியின் கண்ணியத்தையும், அவையின் மாண்பையும் குறைத்து விட்டது. தேசிய கீதத்தை தமது உரைக்கு முன்பும், பின்பும் இசைக்க வேண்டும் என முதலமைச்சருக்கும், சபாநாயகருக்கும் ஆளுநர் பலமுறை கடிதம் எழுதப்பட்டது. ஆனால், ஆளுநரின் அறிவுறுத்தலை அரசு நிராகரித்து விட்டது.

தேசிய கீதம் இசைப்பதற்காக அனைவரும் எழுந்த போது வழக்கமான நடைமுறையை பின்பற்றாமல் ஆளுநரை சபாநாயகர் விமர்சித்தார். தாம் கோட்சேவை பின்பற்றுபவர் என்ற சபாநாயகரின் குற்றச்சாட்டு அவரது பதவியின் கண்ணியத்தை குறைந்து விட்டது, எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 252

0

0