இரத்த தானம் செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

Author: Hemalatha Ramkumar
30 August 2021, 10:49 am
benefits of donating blood you must know about
Quick Share

தானத்திலேயே சிறந்த தானம் இரத்த தானம் என்று சொல்லப்படுகிறது. அவசரகதியில்  இரத்தம் தேவைப்படுவோருக்கு இரத்தம் கொடுத்து உதவுவதால் இரத்தம் பெறுவோருக்கு மட்டுமே உடல்நலம் ஆரோக்கியமடையும் என்பதில்லை, இரத்தம் கொடுப்பவர்களுக்கு உடல்நலம் ஆரோக்கியமடையும்.  

அப்படி, இரத்த தானம் செய்வதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை இந்த பதிவில் அறிந்துக்கொள்ளலாம்.

எடை இழப்பு: 

சரியான இடைவெளியில் இரத்த தானம் செய்வதால் உடல் எடைக் குறைய உதவியாக இருக்கும் மற்றும் பெரியவர்களில் உடல்நலன் மேம்பட இது ஒரு வழியாக இருக்கும். கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் தகவலின்படி, இரத்தத்தை தானம் செய்வது, அதாவது 450 மிலி இரத்த தானம் செய்வதால் உங்கள் உடல் சுமார் 650 கலோரிகளை குறைக்க உதவுகிறது. ஆனால் எடை இழக்க வேண்டுமென்றே இரத்த தானம் செய்வது கூடாது. இரத்த தானம் செய்வதற்கு முன், உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர்க்க மருத்துவர்களின் ஆலோசனைப் பெறுவது அவசியம்.

ஹீமோக்ரோமாடோசிஸைத் தடுக்க முடியும்:

இரத்த தானம் ஹீமோக்ரோமாடோசிஸ் ஏற்படும் ஆபத்தை குறைக்க அல்லது வளர்ச்சியைத் தடுக்க உதவும், ஹீமோக்ரோமாடோசிஸ் என்பது உடலில் இரும்புச்சத்து அதிகமாக உறிஞ்சப்படுவதால் உண்டாகும் ஒரு சிக்கலாகும். வழக்கமாக இரத்த தானம் செய்வதன் மூலம் இரும்புச் சத்து சுமையை குறைக்கலாம், எனவே ஹீமோக்ரோமாடோசிஸ் உள்ளவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். எவ்வாறாயினும், இரத்த தானம் செய்யும் போது அளவோடும், குறிப்பிட்ட இடைவெளியிலும் கொடுத்தால் மட்டுமே  ஹீமோக்ரோமாடோசிஸ் பிரச்சினையைக் குணப்படுத்த முடியும்.

இதய நோய் அபாயத்தை குறைக்க உதவும்: 

வழக்கமாக சரியான இடைவெளியில் இரத்த தானம் செய்வதன் மூலம் இரும்புச்சத்து அளவைக் கட்டுப்படுத்த முடியும், இதனால் இதய நோய் அபாயம் ஏற்படுவது குறைகிறது. உடலில் அதிக அளவு இரும்பு சேர்வதால் ஆக்ஸிஜனேற்ற சேதம் ஏற்படலாம், இது முதுமை, மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றை துரிதப்படுத்துவதில் முக்கிய காரணியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் சரியான கால இடைவெளியில் மருத்துவ ஆலோசனையுடன் இரத்த தானம் செய்வது இதய நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவும்.

புற்றுநோய் ஏற்படும் ஆபத்து குறையும்: 

உடலில் அதிக அளவு இரும்புச்சத்து புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணமாகும். இரத்த தானம் செய்வதன் மூலம், நீங்கள் ஆரோக்கியமான இரும்புச்சத்து அளவைப் பராமரிக்கலாம், இதன் மூலம் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க முடியும்.

புதிய இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவும்: 

இரத்த தானம் செய்வதால் புதிய இரத்த அணுக்களின் உற்பத்தியைத் தூண்ட முடியும். இரத்த தானம் செய்த பிறகு, எலும்பு மஜ்ஜையின் உதவியுடன் உங்கள் உடலின் அமைப்பு, இரத்த தானம் செய்த 48 மணி நேரத்திற்குள் வேலை செய்யும். புதிய இரத்த அணுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு, இழந்த அனைத்து சிவப்பு இரத்த அணுக்களும் 30 முதல் 60 நாட்களுக்குள் மாற்றப்படும். எனவே, இரத்த தானம் முக்கிய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவியாக இருக்கும்.

Views: - 1019

0

0