சொர்ணமசூரி பாரம்பரிய நெல்: இந்த அரிசியின் பழைய சோறு கூட தேவாமிர்தம் போல இருக்குமாம்…!!!

23 January 2021, 10:16 pm
Quick Share

பாரம்பரியத்தை மறந்து வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் உண்மையில் அதனால் கிடைக்கும் பல நன்மைகளை இழக்கிறோம் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கும் பாரம்பரிய நெல் வகைகள் ஏராளமாக உள்ளன. அதில் ஒன்று தான் சொர்ணமசூரி. இந்த நெல் வகையை பற்றிய தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

சொர்ணமசூரி பிறப்பிடம்:

சொர்ணமசூரி திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஒரு நெல் ரகம் ஆகும். இந்த நெல்லானது பொன்னிறமாக இருப்பதால் இதற்கு சொர்ணமசூரி என்ற பெயர் பெற்றது. இது தங்கம் போல பளபளவென இருக்கும். இந்த நெல் வகையை அறுவடை செய்ய 120 முதல் 130 நாட்கள் வரை ஆகும். ஒரு ஏக்கரில் இதனை பயிரிடும் போது அதிலிருந்து நமக்கு இருபத்தி எட்டு மூட்டை நெல் கிடைக்கும். இந்த நெல்லானது வெள்ளை நிற அரிசியை கொடுக்கும். 

பயன்கள்: 

இந்த நெல்லில் இருந்து கிடைக்கும் அரிசி வெண்மையாக இருக்கும் காரணத்தினாலும், மெலிந்து காணப்படுவதாலும், அதோடு சுவையாகவும் இருப்பதால் சீரக சம்பா அரிசிக்கு அடுத்தபடியாக பிரியாணி சமைப்பதற்கு இந்த அரிசி தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது மட்டும் இல்லாமல் இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் இதன் பழைய சாதம் மிகுந்த சுவையாகவும், மூன்று நாட்கள் ஆனாலும் கெடாமல் இருக்கும். 

மருத்துவ குணங்கள்:

சொர்ணமசூரி அரிசியை எடுக்கும் போது நமது நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும். எனவே தொடர்ந்து இந்த அரிசியை எடுத்து வந்தால் அனைத்து விதமான நோய்களிலிருந்தும் நம்மை பாதுகாத்து கொள்ளலாம். எனவே இது உணவாக மட்டும் இல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால் ஒரு மாமருந்தாக கருதப்படுகிறது. அதோடு இதில் கஞ்சி வைத்து எடுக்கும் போது பித்தம், வாயு போன்றவைகளுக்கு தீர்வாக அமைகிறது. 

எளிய பராமரிப்பு:

ஆற்றுப்பாசனம் மற்றும் கிணற்றுப்பாசனம் போன்ற எளிய முறை பராமரிப்பு இந்த நெல் வளர போதுமானதாக இருக்கும். நேரடி நடப்பு மற்றும் விதைப்பிற்கு ஏற்ற வகை இது. இயற்கை சீரழிவுகளை ஓரளவு தாக்குப்பிடிக்கக்கூடிய இந்த நெல் வகை செயற்கை இரசாயனங்கள் இல்லாமலே செழித்து வளரும். 

சொர்ணமசூரி நெல் வகையைப் பற்றிய தகவல்களை இப்போது தெரிந்து கொண்டோம். பாரம்பரியத்தை காப்போம், நலமுடன் வாழ்வோம். சமூக நலன் கருதி updatenews360.