சியா விதைகள் சப்ஜா விதைகள் இரண்டும் ஒன்றுதானா? வித்தியாசம் தெரிஞ்சிக்கோங்க

12 June 2021, 9:48 am
Difference between chia seeds and basil sabja seeds and its uses
Quick Share

சியா விதைகள் மற்றும் சப்ஜா விதைகள் இரண்டுமே ஒன்றுதான் என்று பலர் நினைக்கிறார்கள். பொதுவாக கடைகளில் சியா விதைகளைக் கேட்டாலே வித்தியாசம் தெரியாத அவர்களே சப்ஜா விதைகளைத் தான் தருகிறார்கள். இரண்டுமே உடலுக்கு மிகவும் நல்லது தான். அதிலொன்றும் சந்தேகம் இல்லை. ஆனால் இரண்டுக்குமே வெவ்வேறு நன்மைகள் உண்டு. அதையறிந்து தான் நாம் அதை எடுத்துக்கொள்ள வேண்டும். எல்லாமே நல்லதுதானே என்று வித்தியாசம் தெரியாமல் எடுத்துக்கொள்ளக்கூடாது.

சப்ஜா விதைகள் என்பது திருநீற்று பச்சிலை எனும் மூலிகைச் செடியில் இருந்து கிடைக்கும். ஆங்கிலத்தில் Basil Seeds என்றும் சொல்வார்கள். ஆனால் சியா விதைகள்  மெக்சிகோவை பூர்வீகமாகக் கொண்டவை. சியா விதைகள் சப்ஜா விதைகளை விட சிறியதாக இருக்கும். 

நிறத்தைப் பொறுத்தவரை சப்ஜா விதைகள் ஒரே மாதிரியாக கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்கும். ஆனால் சியா விதைகள் வெள்ளை, கருப்பு மற்றும் சாம்பல் நிறங்களில் கிடைக்கும். எள் போல் சிறிய அளவில் இருக்கும். இரண்டையும் தண்ணீரில் ஊறவைத்தால், சியா விதைகளை விட சப்ஜா விதைகள் பெரியதாக இருக்கும். நம்ம ஊரில் சர்பத், ரோஸ் மில்க் போன்ற குளிர் பானங்களில் போட்டுத் தருவது இந்த சப்ஜா விதைகளைத் தான்.

சப்ஜா விதைகளை தண்ணீரில் ஊறவைத்து மட்டுந்தான் பயன்படுத்த வேண்டும். ஆனால் சியா விதைகள் அப்படியில்லை தண்ணீரில் ஊறவைத்து எடுத்துக்கொள்ளலாம் இல்லையென்றால் அரைத்து உணவுகளில் சேர்த்தும் சாப்பிடலாம். 

தண்ணீரில் போட்டபிறகு நன்கு விரிவடையும் தன்மை கொண்டதால், உடல் எடைக் குறைக்க நினைப்பவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம். நீண்ட நேரம் பசியெடுக்காமல் இருக்கும்.

சப்ஜா விதைகள் உடலை குளிர்ச்சியையும் சியா விதைகள் உடலுக்கு வலிமையையும் தரக்கூடியது. இரண்டுமே குறைந்த கலோரிகளை கொண்ட உணவுகள் தான், ஆனால் அதிக ஊட்டச்சத்துக்களை கொண்ட உணவு என்பதால் டயட்டில் இருப்பவர்களுக்கு இரண்டுமே ஏற்ற உணவுதான்.

சியா விதைகளில் புரதம், நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளது. இதனால் செரிமான பிரச்சினைகளை சரிசெய்கிறது. உடல் மிகவும் சோர்ந்து போனால் உடனடி புத்துணர்ச்சிக்கு சியா விதைகளை சாப்பிடலாம். உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும் இது உதவும். 

சப்ஜா விதைகள் உடலை குளிர்விக்கின்றன. இதில் இரும்புச்சத்து உள்ளது. அதே போல மன அழுத்தம் நிறைந்த பணிகளைச் செய்யும் போது தண்ணீரில் இதை போட்டுக்கொண்டு குடித்தால் மன அழுத்தம் ஏற்படாமல் உடல்நிலை சீராக இருக்கும். உடல் வெப்பமாகாமல் தடுக்கும். அதிக உடல் வெப்பம் உள்ளவர்கள் தினசரி குடிநீரில் சப்ஜா விதைகளைப் போட்டு குடிக்கலாம். இது உடலின் நச்சுக்களைப் போக்கி இரத்தத்தை சுத்திகரிக்கிறது.

Views: - 348

0

0