தினமும் ஒரு டம்ளர் ரசம் குடித்தால் உடம்பில் இத்தனை மாற்றங்கள் நிகழுமா…???

25 February 2021, 10:25 am
Quick Share

ரசத்தை சாதாரணமாக செய்து விடலாம் என்றாலும் அதிலுள்ள ஒவ்வொரு பொருட்களுமே மிகச்சிறந்த மருத்துவ குணங்களை கொண்டவை. சுவை மற்றும் நறுமணம் நிறைந்த இந்த பொருட்கள் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். வெளிநாடுகளில் சூப் உணவுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கப்படும். அது போல நம் நாட்டில் ரசம். 

காய்ச்சல், இருமல், தும்மல், உடல் சோர்வு, உடல் களைப்பு, செரிமானப் பிரச்சனை, சத்துகுறைபாடு, தொண்டை கமறல், வயிற்று புண் போன்றவை குணப்படுத்த ரசம் ஒரு நல்ல கை வைத்தியமாக பயன்படுத்தப்படுகிறது. இதனை எளிதாகவும் செய்து விடலாம்.

பல வகையான ரசம்:

புளி ரசம், தக்காளி ரசம், எலுமிச்சை ரசம், பிரண்டை ரசம், தூதுவளை ரசம், மிளகு ரசம், கொள்ளு ரசம், பாசிப்பயறு ரசம், பருப்பு ரசம், அன்னாசிப்பழ ரசம் என்று பல வகையான ரசம் உள்ளது. இந்த ரசம் அனைத்திற்கும் அடிப்படையாக இருப்பது புளி, மிளகு, சீரகம், மஞ்சள் தூள், பூண்டு, வர மிளகாய், தக்காளி, கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை, பெருங்காயம் ஆகியவை ஆகும். 

செரிமானம்:

*சைவம் மற்றும் அசைவ உணவுகள் என்று எதை சாப்பிட்டாலும் அது செரிமானம் ஆக ரசம் உதவும்.

*தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக குழந்தைகள் உணவில் ரசம் சேர்க்கப்படும்.

*ஏனெனில் இது தாய்ப்பாலுக்கு இணையான சத்தை வழங்கக்கூடியது.

*அதே போல கர்ப்பிணி பெண்கள் உணவிற்கு பிறகு ஒரு கிளாஸ் ரசம் குடித்தால் ஈசியாக ஜீரணம் ஆகும்.

புளி:

ரசத்தின் சுவைக்கு புளி முக்கிய காரணம். புளியில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. குடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற இது உதவுகிறது. புளி ஒரு சிறந்த மலமிளக்கி. இதனால் மலச்சிக்கல் பிரச்சினை நீங்கும்.

மிளகு:

காய்ச்சல் வந்தாலே ரசம் சாதம் தான் கொடுப்பார்கள். கையில் மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்ற ஒரு பழமொழி உண்டு. ஏனெனில் நச்சுகளை முறிக்கும் தன்மை மிளகுக்கு இருக்கிறது. உடலில் உள்ள நச்சுகளை சிறுநீர் வழியாக வெளியேற்றி விடும். மேலும் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை இதற்கு உள்ளது. மிளகு வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதால் உடல் பருமன் ஏற்படாமல் தடுக்கும்.

சீரகம்:

பசியை உண்டாக்கும் தன்மை சீரகத்திற்கு உண்டு. வயிற்றுப்பொருமல், வாய்வுத்தொல்லை, அஜீரணக்கோளாறுகள், பித்தம் உணவு செரியாமை போன்றவைகளுக்கு நல்ல தீர்வு தருகிறது. சீரக ரசம் தொண்டைக்கு இதமாக இருக்கும். நுரையீரலுக்குள் கிருமிகள் வராமல் தடுக்கும். வயிறு உப்புசத்திற்கு நல்ல மருந்தாக அமைகிறது. 

பெருங்காயம்:

பெரிய பெரிய நோய்களை தடுக்கும் தன்மை பெருங்காயத்திற்கு உண்டு. பெருங்காயம் நரம்புகளை வலுப்படுத்தும். வலிப்பு நோயை தடுக்கிறது. வாயுத்தொல்லை தீர பெருங்காயம் ஒரு அற்புதமான மருந்து. 

மஞ்சள் தூள்:

மஞ்சள் ஒரு நல்ல கிருமி நாசினி. புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் மஞ்சள் தூளுக்கு உண்டு. இதற்கு குர்குமின் என்ற வேதிப்பொருளே காரணம். தொற்று கிருமிகளுக்கு எதிராக நம்மை பாதுகாக்கிறது. 

பூண்டு:

சளித்தொல்லை நீங்க பூண்டு பயன்படுகிறது. இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. குடல் பூச்சிகளை வெளியேற்ற பூண்டு உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நம்மை எந்த விதமான நோய்களும் அண்ட விடாமல் பார்த்து கொள்கிறது. பூண்டில் ஆன்டியாக்ஸிடன்டுகள், வைட்டமின் C மற்றும் வைட்டமின் B6 உள்ளது.

கொத்தமல்லி தழை:

கொத்தமல்லி தழை தூவினாலே ரசத்திற்கு தனி வாசனை உண்டு. இது உடல் சூட்டை தணிக்கும். கண் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். மாதவிடாய் கோளாறுகளை போக்கும் தன்மை இதற்கு உண்டு. 

கறிவேப்பிலை:

கறிவேப்பிலை இலைகளை சாப்பிடுவதால் நமது கூந்தல் கருமையாக இருக்கும். இதனால் நாம் இளமையாக இருக்கலாம். வயிற்று கோளாறுகளை சமாளிக்க கறிவேப்பிலை உதவும். எனவே கறிவேப்பிலையை ஒதுக்கி வைக்காமல் அதனையும் சேர்த்து மென்று சாப்பிடுங்கள். 

எனவே இனியும் ரசம் தானே என சாதரணமாக கருதாமல் அதன் சுவையை அனுபவித்து நன்மைகளை பெறுங்கள். 

Views: - 58

0

0