கலவைக்கீரையை பற்றி கேள்விபட்டதுண்டா… இதன் மகத்துவம் பற்றி அறிவோம் வாங்க!!!

4 February 2021, 9:21 pm
Quick Share

கீரைகள் ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக கருதப்படுகிறது. நம் முன்னோர்கள் மழைக்காலங்களிலும், அதற்கு பின்னரும் வயல் ஓரங்கள், வேலிப்பகுதிகள், வரப்புகள் மற்றும் தோட்டங்களில் ஏராளமான கீரைகளை பறித்து சமைத்து சாப்பிடுவார்கள். தினமும் ஒரு கீரை சாப்பிட வேண்டும் என்ற கணக்கெல்லாம் அவர்களுக்கு கிடையாது. கையில் கிடைக்கும் கீரை வகைகள் எத்தனையாக இருந்தாலும் அவற்றை பறித்து ஒன்றாக கடைந்து மசியல் செய்து சாப்பிடுவார்கள். 

ஒரே ஒரு கீரை இல்லாமல் பல வகையான கீரைகளை சமைத்து சாப்பிடுவது தான் கலவை கீரை. இந்த கீரை வகைகள் அனைத்தும் தானாக முளைந்தவை ஆகும். இதனை விதைகள் போட்டு பயிரிட மாட்டார்கள். ஆர்கானிக் முறையில் இந்த கீரைகள் வளர்வதால் இதில் இரசாயனங்கள் எதுவும் இருக்காது. ஆனால் தற்போது நாம் வாங்கி சாப்பிடும் கீரை கெமிக்கல்கள் தெளித்து வளர்க்கப்படுகிறது. இந்த கீரைகளில் சத்துக்களைக் காட்டிலும் இரசாயனங்கள் தான் உள்ளன. எனவே ஆரோக்கியமான முறையில் இயற்கையாக வளரும் கலவைக் கீரையைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். 

பொதுவாக கீரைகள்  நோய்கள் வராமல் தடுக்கவும், நோயின் தீவிரத்தை குறைக்கவும் உதவும். தினமும் கீரைகள் சாப்பிட்டு வந்தால் சத்து குறைபாடு என்பதே ஏற்படாது. ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை சமநிலைப்படுத்தும் தன்மை கீரைக்கு உண்டு. மலச்சிக்கல், எலும்பு தேய்மானம், நீரிழிவு நோய், மாதவிடாய் கோளாறுகள், மாரடைப்பு போன்ற நோய்களை தவிர்க்க கீரைகளை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். 

அரைக்கீரை, முளைக்கீரை, பொன்னாங்கன்னி கீரை, முருங்கைக்கீரை, பருப்பு கீரை, புளிச்ச கீரை, முடக்கத்தான் கீரை, சிறுகீரை, வெந்தயக்கீரை, முள்ளங்கி கீரை, பாலக்கீரை, தண்டுக்கீரை, பண்ணக்கீரை போன்ற கீரை வகைகள் நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் கலவைக் கீரை என்று வரும்போது அதில் சுக்கான் கீரை, வல்லாரைக்கீரை, துத்திக்கீரை, தும்பை இலை, குப்பைக்கீரை, முள்முருங்கை, கீழாநெல்லிக்கீரை, பொடுதலைக்கீரை, கரிசலாங்கண்ணி கீரை, தூதுவளை, காசினிக்கீரை, முடக்கறுத்தான், கற்பூரவல்லி என கூடுதலாக இருக்கும். 

கலவைக் கீரை என்றால் வெறும் கீரைகள் மட்டும் அல்லாமல் அதில் மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகைகளும் அதில் அடங்கும். இந்த கலவைக் கீரையை நாம் சமைத்து சாப்பிடும் போது உடலுக்கு ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது. இப்போது இந்த கலவைக் கீரையில் உள்ள கீரை வகைகளின் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். 

நன்மைகள்:

*உடலில் உள்ள அதிகப்படியான உஷ்ணத்தை குறைத்து உடலை குளிர்ச்சியாக்கும் தன்மை வெந்தயக்கீரைக்கு உண்டு. 

*சிறுநீரை பெருக்கும் ஆற்றல் சிறுகீரைக்கு உள்ளது.

*எலும்புகள் வலுவடைய முடக்கத்தான் கீரையை சாப்பிட வேண்டும்.

*கல்லீரல் பலம் பெற கரிசலாங்கண்ணி மற்றும் கீழாநெல்லி கீரை உகந்தது. 

*நினைவாற்றல் அதிகரிக்க வல்லாரைக்கீரை உதவும்.

*வயிற்றில் புண் இருப்பவர்கள் மணத்தக்காளி கீரை சாப்பிட்டு வர விரைவில்  குணமாகும்.

*முருங்கைக்கீரை, முளைக்கீரை, பசலைக்கீரை இரும்பு சத்து நிறைந்தது. 

*கருப்பையில் உள்ள கோளாறுகள் மற்றும் குடல் புண்களை ஆற்றும் தன்மை தண்டுக்கீரைக்கு உண்டு. 

*நீரிழிவு நோயாளிகள் பாலக்கீரையை சாப்பிட வேண்டும்.

*அரைக்கீரை வாய்வு தொல்லையை போக்கும். 

*சளித் தொல்லை நீங்க தூதுவளை இலையை சாப்பிட வேண்டும்.

இத்தகைய நன்மைகள் அடங்கிய கலவை கீரையை வாரம் ஒரு முறையாவது சாப்பிட்டு வாருங்கள். நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம். 

Views: - 0

0

0