உடலை குளிர்ச்சியாக வைக்க உதவும் ஆரோக்கியமான வாழைத்தண்டு சூப்!!!

2 March 2021, 7:14 pm
Quick Share

மாலை நேரத்தில் டீ, காபி பருகும் பழக்கம் நம்மில்  பெரும்பாலனோருக்கு இருக்கும். ஆனால் குறைந்தது வாரத்தில் இரண்டு நாட்களாவது சூப் வகைகளை செய்து சாப்பிடுங்கள். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை ஏற்படுத்தும். அந்த வகையில் இன்று நாம் வாழைத்தண்டு சூப் எப்படி செய்வது என பார்க்கலாம். வாழைத்தண்டில் ஏகப்பட்ட நார்ச்சத்து உள்ளது. அது மட்டும் இல்லாமல் இது உடல் உஷ்ணத்தை குறைத்து உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி உடலை சுத்தப்படுத்தும். இப்போது வாழைத்தண்டு சூப் எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்:

வாழைத்தண்டு – 1 கப் (நறுக்கியது)

மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

சீரகப் பொடி – 1/4 தேக்கரண்டி

மிளகுத் தூள் – சுவைக்கேற்ப

எலுமிச்சை சாறு – சுவைக்கேற்ப

உப்பு – சுவைக்கேற்ப

தாளிக்க:

எண்ணெய் – 1 தேக்கரண்டி

கடுகு – 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி தழை- சிறிதளவு

செய்முறை:

*வாழைத்தண்டு சூப் செய்வதற்கு முதலில் வாழைத்தண்டில் உள்ள நார்ப்பகுதியை நீக்கி விட்டு அதனை குட்டி குட்டியாக நறுக்கி கொள்ளவும்.

*நறுக்கிய வாழைத்தண்டை கொஞ்ச நேரம் மோரில் போட்டு ஊற வையுங்கள்.

*இப்போது ஒரு குக்கரை எடுத்து அதில் வாழைத்தண்டு, உப்பு, மஞ்சள் தூள் மற்றும் இது வேக இரண்டு கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் மூன்று விசில் வரும்வரை காத்திருக்கவும்.

*வாழைத்தண்டு நன்றாக வெந்த பின் அதிலுள்ள தண்ணீரை வடிகட்டி எடுக்கவும்

*அடுத்து வேக வைத்த வாழைத்தண்டை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து கொள்ளுங்கள்.

*அரைத்த வாழைத்தண்டை நாம் வடிகட்டி வைத்த நீரோடு சேர்த்து கலந்து கொள்ளவும்.

*இதனை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

*மற்றொரு அடுப்பில் ஒரு சிறிய வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

*இந்த தாளிப்பை சூப்பில் சேர்த்து மேலும் சீரகத் தூள், தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு நிமிடம் கலக்கவும்.

*கடைசியில் கொத்தமல்லி தழை தூவி சூடாக பரிமாறவும்.

Views: - 22

0

0