கபத்தை சரி செய்யும் காரசாரமான இஞ்சி மொரப்பா செய்வது எப்படி???

Author: Udhayakumar Raman
15 March 2021, 7:34 pm
Quick Share

இஞ்சியில் இல்லாத மருத்துவ குணங்களே இல்லை என கூறலாம். இதன் காரணமாக இஞ்சி பண்டைய காலத்தில் இருந்தே வீட்டு வைத்தியங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் குமட்டல், வாந்தி ஆகியவற்றை போக்க இஞ்சி மொரப்பா பயன்படுத்தப்படுகிறது. பயணங்களின் போது ஒரு சிலருக்கு வாந்தி எடுக்கும் பழக்கம் இருக்கும். இதனை தடுக்க இஞ்சி மொரப்பா சாப்பிடுவார்கள். இத்தகைய இஞ்சி மொரப்பாவை கடைகளில் வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக இதனை ஈசியாக நாமே வீட்டில் செய்யலாம். இப்போது இஞ்சி மொரப்பா எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்: 

200 கிராம் இஞ்சி

4 தேக்கரண்டி நெய்

2 கப் சர்க்கரை 

2 கப் பால்

2 ஏலக்காய்

தேவையான அளவு உப்பு

செய்முறை:

*இஞ்சி மொரப்பா செய்வதற்கு முதலில் இஞ்சியை தோல் சீவி, கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

*பிறகு இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கி அதனை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து கொள்ளவும்.

*அடுத்து கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து நெய் ஊற்றவும்.

*நெய் உருகியதும் நாம் அரைத்து வைத்துள்ள இஞ்சி விழுதை சேர்த்து கிளறவும்.

*எண்ணெய் தனியாக பிரிந்து வரும்வரை ஐந்தில் இருந்து ஆறு நிமிடங்கள் அடிப்பிடிக்காமல் வதக்குங்கள்.

*அடுத்து சர்க்கரையை சேர்த்து மேலும் 10 – 12 நிமிடங்கள் கிளறி விடவும்.

*இஞ்சி மற்றும் சர்க்கரை கலவை நன்றாக கெட்டியானதும், அதில் பால் ஊற்றி மேலும் கிளறி விடவும்.

*இது மேலும் கெட்டியான பின் ஏலக்காய் பொடி மற்றும் உப்பு சேர்த்து அடுப்பை அணைத்து விடலாம்.

*ஒரு சமமான தட்டில் நெய் தடவி அதன் மீது நாம் செய்து வைத்த கலவையை போடவும்.

*இது சூடாக இருக்கும் போதே உங்களுக்கு பிடித்தமான வடிவத்தில் நறுக்கி கொள்ளவும்.

*சூடு ஆறியதும் துண்டுகளை தனியாக எடுத்து கொள்ளலாம்.

*நீங்கள் விருப்பப்பட்டால் உலர்ந்த பழங்கள் கூட சேர்க்கலாம்.

*அவ்வளவு தான்… காரசாரமான, இனிப்பான இஞ்சி மொரப்பா தயார்.

Views: - 252

0

0