காலை உணவின் மகத்துவம் தெரிந்தால் நிச்சயம் அதனை தவிர்க்க மாட்டீர்கள்!!!

8 October 2020, 10:31 pm
Quick Share

நாம் இரவு முழுவதும் தூங்கிவிடுவதால் கிட்டத்தட்ட ஏழு முதல் எட்டு மணி நேரம் வரை நாம் எதுவும் சாப்பிடுவது கிடையாது. எனவே காலை உணவானது நம் ஆரோக்கியத்தில்  மிகப்பெரிய பங்கினை வகிக்கிறது என்று கூறலாம். இதன் முக்கியத்துவத்தை அறியாமல் பலர் காலை உணவை தவிர்ப்பது உண்டு. இதனால் பல எதிர்மறை விளைவுகளுக்கு ஆளாக நேரிடும். 

காலையில் தாமதமாக எழும் காரணத்தினால் பலர்  வேலைக்கு செல்லும் அவசரத்தில் சிற்றுண்டியை எடுக்காமலும் அல்லது குறைவாக சாப்பிட்டும் அறக்க பறக்க ஓடுவார்கள். ஆனால் காலை உணவு என்பது மிக மிக முக்கியமான ஒன்று என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இரவு உணவிற்கும் காலை உணவிற்கும் இடையில் நீண்ட இடைவெளி இருக்கும் காரணத்தினால் தான் காலை உணவிற்கு “பிரேக்ஃபாஸ்ட்” என்ற பெயர் கிடைத்துள்ளது. 

காலை உணவு சரியான நேரத்தில், சரியான அளவில், சீரான ஊட்டச்சத்தோடு உண்ணும் ஒருவன் அந்த நாள் முழுவதும் சிறப்பாக செயல்படுகிறார் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காலை உணவு ஊட்டச்சத்து நிறைந்த ஒரு உணவாக இருப்பது மிகவும் அவசியம். உங்கள் வீட்டில் வளரும் குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் தினை அரிசி, கேழ்வரகு போன்ற தானிய வகைகளினால் ஆன உணவுகளை சமைத்து கொடுப்பது சிறப்பு. 

காலை உணவை சாப்பிடாமல் விட்டால் உடல் எடையை குறைத்து விடலாம் என்று பலர் தப்பு கணக்கு போடுகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் காலை உணவை தவிர்ப்பது என்பது உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். இதற்கு காரணம் காலை உணவை தவிர்க்கும் உங்களுக்கு அதிகப்படியான பசி எடுக்கும். இதன் காரணமாக நீங்கள் அளவில்லாமல் சாப்பிடுவீர்கள். இவற்றின் விளைவாக உங்கள் உடல் எடையானது கணிசமாக அதிகரிக்க தொடங்குகிறது. 

நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ விரும்புகிறவர்கள் காலை உணவை தவறாமல் சாப்பிட வேண்டும். காலை உணவின் மூலமாக தான் நமது உடலானது தன்னை தானே ரீசார்ஜ் செய்து சிறப்பாக செயல்படுகிறது. நாள் முழுவதும் நல்ல சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் வெறும் டீ, காபியோடு நிறுத்தி கொள்ளாமல் ஆரோக்கியமான ஒரு காலை உணவை எடுத்து கொள்ள வேண்டும்.

Views: - 35

0

0