தலைவலி வந்தா மருந்து மட்டும் போதாது! அசால்ட்டா இருக்காம இதெல்லாமும் நீங்க கவனிக்கணும்

15 July 2021, 11:12 am
lifestyle changes you should make if you suffer from regular headaches
Quick Share

நம்மில் யாருக்குமே தலைவலி ஏற்பட்டதில்லை என்று சொல்லிவிட முடியாது. பணியிடங்களில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், வேலைகளை முடிக்க வேண்டும் என்பது போன்ற அழுத்தம் ஏற்படும்போது தலைவலி உண்டாகும். இதனால் பலரும் அவதிப்படுவார்கள். சில சமயங்களில் தலைவலி இருந்தால் தைலம், மாத்திரை என ஏதேனும் ஒன்றை போட்டு சரி செய்து கொள்ளலாம். ஆனால், தொடர்ச்சியாக தலைவலி ஏற்படும் போது அதை கண்டிப்பாக கவனம் எடுத்து கவனித்து மருத்துவ உதவி பெற வேண்டும்.

தொடர்ச்சியான தலைவலி உங்கள் வேலைகளுக்கு இடையூறாக அமையும் மற்றும் கடுமையான மனநிலை மாற்றங்களுக்கு வழிவகுக்கும். இது உடலில் ஏற்படும் பிரச்சினைக்கான காரணமாகவும் இருக்கலாம். எனவே இது போன்ற நாட்பட்ட தலைவலி பிரச்சினை ஏற்படாமல் இருக்க சில பழக்கங்களை மாற்றுவது நல்லது. உங்கள் அன்றாட வழக்கத்தில் நீங்கள் பின்பற்றவேண்டிய சில மாற்றங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

நீங்கள் எழுந்த தருணத்திலிருந்து படுக்கைக்குச் செல்லும் வரை நாள் முழுக்க நீங்கள் உண்ணும் உணவுகளின் அளவு அதிகமாக ஆனாலும் உங்கள் தலைவலி மிகவும் அதிகமாகும். காஃபி, தேநீர், ஆல்கஹால், உப்பு, எண்ணெய் சேர்த்த தின்பண்டங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிகமாக உட்கொள்வதும் தலைவலியை ஏற்படுத்தக்கூடும். 

எந்த உணவு உங்களுக்கு தலைவலியை ஏற்படுத்துகிறது என்பதைக் கவனித்து, பகல் நேரத்தில் இதுபோன்ற உணவுகளை உட்கொள்வதைக் குறைப்பது முக்கியம். தவிர, உணவைத் தவிர்ப்பதும் தலைவலியை உண்டாகும். சீரான உணவை உட்கொள்ள முயற்சி செய்யுங்கள். பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்கள் உங்கள் வழக்கமான உணவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

பணியிடங்களில் நாற்காலியில் சரியான தோரணையில் உட்காரவில்லை என்றாலும், நீண்ட நேரம் உட்கார்ந்தே இருந்தாலும் தலைவலி பிரச்சினை ஏற்படக்கூடும். எனவே நீண்ட நேரம் உட்கார்ந்தே இருக்கும் வேளையில் உங்கள் முதுகெலும்பு நேராக இருக்கும்படி அமர வேண்டும். அதே போல நீண்ட நேரம் உட்கார்ந்தே இருக்க வேண்டிய தேவையிருந்தால் முன்னரே திட்டமிட்டு அவ்வப்போது ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும்.

தேவையின்றி எல்லா விஷயங்களுக்கும் பதற்றப்படுவதாலும், கோபப்படுவதாலும் நமக்கு தலைவலி உண்டாகக்கூடும். எனவே தேவையின்றி ஏற்படும் பதற்றத்தை தியானம், சுவாச பயிற்சிகள், யோகா அல்லது நடைபயிற்சி போன்ற பயிற்சிகளை செய்வதன் மூலம் மனதை அமைதிப்படுத்தலாம் மற்றும் மன அழுத்த ஹார்மோன்கள் வெளியாவதால் அளவைக் குறைக்கலாம். உங்கள் மன அழுத்தத்தை உங்களால் நிர்வகிக்க முடியவில்லை என்றால் ஒரு நிபுணரை அணுகுவது நல்லது.

புகைபிடிப்பதால் எந்த ஆரோக்கிய நன்மைகளும் இல்லை. இது உங்கள் நுரையீரலை சேதப்படுத்துகிறது, குடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது மற்றும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியையும் குறைக்கிறது. இது மட்டுமில்லாமல் தலைவலியையும் ஏற்படுத்தும். புகைபிடித்தல் மற்றும் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதால் தலைவலி ஏற்படும். தினமும் அதிக சிகரெட்டுகளை புகைப்பிடித்தால் அல்லது வெறும் வயிற்றில் சிகரெட் பிடித்தல் வலி மிகவும் தீவிரம் அடையும். நிகோடின் இருப்பதன் காரணமாகவே தலைவலி ஏற்படுகிறது, நிகோடின் இரத்த நாளங்களை கட்டுப்படுத்தி மூளைக்கு இரத்த ஓட்டத்தை குறைப்பதால் தலைவலி ஏற்படும். எனவே படிப்படியாக புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிடுவது நல்லது.

நாள் முழுவதும் வேலை செய்த பிறகு, நம் உடலுக்கு ஓய்வு கொடுப்பது மிகவும் முக்கியம். உடல் புத்துயிர் பெறவும் நேரம் தேவை. உங்கள் மூளையில் கூடுதல் சுமைகளை வைப்பதும், உங்கள் தூக்க நேரத்தை குறைப்பதும் தலைவலியைத் தூண்டும், எடை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் மற்றும் கவனகுறைவு ஏற்படுத்தும். எனவே நன்றாக தூங்கி உடலுக்கு ஓய்வு கொடுத்து டிஜிட்டல் திரைகளை அதிகம் பார்க்காமல் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு  வந்தாலே வலிமையோடு நலமுடன் வாழலாம்.

Views: - 243

0

0