இதை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் தீராத நோயும் குணமாகுமாம்!!!

Author: Hemalatha Ramkumar
23 May 2023, 12:28 pm
Quick Share

பொதுவாக அனைவராலும் அதிகம் விரும்பப்படாத காய்கறிகளில் ஒன்று சுண்டைக்காயாகும். இதற்கு காரணம் இவற்றின் அதிகப்படியான கசப்புத் தன்மை ஆகும். உருவத்தில் சிறியதாக இருந்தாலும் மிக அதிகமான கசப்பு சுவை உடையதாக இருந்தாலும் சுண்டைக்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் மற்றும் சத்துக்கள் அடங்கி இருக்கின்றன. சுண்டைக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் நமக்கு ஏராளமான நன்மைகள் ஏற்படுகின்றன. சுண்டைக்காய் கிடைக்காத காலங்களில் சுண்டைக்காயை வத்தலாக செய்து பயன்படுத்தலாம்.

சுண்டைக்காயில் வைட்டமின் பி மற்றும் சி போன்ற சத்துகள் அதிகம் உள்ளது. 100 கிராம் சுண்டைக்காயில், 400 மி.கி. கால்சியம், 25 மி.கி. இரும்பு சத்து மற்றும் 200 மி.கி. பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் அடங்கி உள்ளது.

சுண்டைக்காயில் இருக்கக்கூடிய அதிகப்படியான கசப்பு தன்மை இரத்தத்தை சுத்தம் செய்கிறது. மேலும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய ஊட்டச்சத்து குறைபாடுகளை சரி செய்கிறது. இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அதிகரிக்கச் செய்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

வாரம் ஒரு முறை என சுண்டைக்காயை உணவுடன் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வரும் போது நாள்பட்ட குடல் புண் போன்ற நோய்கள் குணமாகிறது. செரிமான கோளாறுகள் உள்ளவர்கள் சுண்டைக்காயை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். புளித்த ஏப்பம், உடல் சோர்வு மற்றும் கை கால் குடைச்சல், இடுப்பு வலி, மூட்டு வலி போன்றவற்றிற்கு சுண்டைக்காய் ஒரு சிறந்த மருந்தாகும்.

மூல நோய் உள்ளவர்கள் ஒரு 20 சுண்டைக்காய் அளவுக்கு நெய்யில் வதக்கி தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது, மூல நோயால் ஏற்படும் கடுப்பு நீங்குகிறது. மூலநோயால் ஏற்படக்கூடிய ரத்தப்போக்கு கட்டுப்படுத்தப்படுகிறது.

சுண்டைக்காய் சிறுநீரை பெருக்கும் ஆற்றல் உடையது. உடலில் தேங்கி இருக்கக்கூடிய அதிகப்படியான யூரியாவை சிறுநீரை பெருகச் செய்வதன் மூலம் வெளியேற்றுகிறது. சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்றவற்றில் தேங்கியிருக்கக்கூடிய கிருமிகள் மற்றும் நச்சுக்களை அழித்து வெளியேற்றுகிறது. இவை பாக்டீரியா மற்றும் வைரஸ் போன்றவற்றை எதிர்க்கும் ஆற்றல் உடையது. எனவே உடலில் உள்ள கிருமிகளுக்கு எதிராக வேலை செய்து நமது உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. மேலும் சுண்டைக்காயில் இயற்கையாகவே புற்றுநோயை எதிர்க்கும் சக்தி உள்ளது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 355

0

0