வாழைத்தண்டின் பெருமையைக் கூற வார்த்தையே இல்லை… நீங்களே படிச்சு தெரிஞ்சுக்கோங்களேன்!!!

Author: Hemalatha Ramkumar
26 May 2023, 10:41 am
Quick Share

வாழையின் அனைத்து பாகங்களும் நமக்கு பயனுள்ளதாக அமைகிறது. அந்த வகையில் வாழைத்தண்டு நமக்கு பல வகையான மருத்துவ நன்மைகளை தருகிறது.
வாழைத்தண்டை பொரியலாகவோ அல்லது சாறாகவோ உண்டு வந்தால் உடலின் பல்வேறு நோய்ப் பிரச்சனைகளை சரிசெய்கிறது.

வாழைத் தண்டுடன், தேவையான அளவு உப்பு, மிளகு மற்றும் வறுத்த சீரகம் சேர்த்து நன்கு அரைத்து, பின் அதில் தேவையான அளவு நீர் சேர்த்து வடிகட்டும்போது நமக்கு வாழைத்தண்டு சாறு கிடைக்கிறது. இந்த வாழைத்தண்டு சாறு குடிப்பதனால் கிடைக்கும் பலன்களில் ஒரு சிலவற்றை காண்போம்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை வாழைத்தண்டு ஜூஸ் குடிப்பது மிகவும் நல்லது. நெஞ்செரிச்சல் அதிகமாய் இருந்தால் உடனடி தீர்வு காண, காலையில் வெறும் வயிற்றில் வாழைத்தண்டி ஜூஸ் குடிப்பது நல்லது.

வாழைத்தண்டு சாற்றுடன் சிறிதளவு இஞ்சி சேர்த்து குடித்து வந்தால், இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான நார் சத்துக்கள் நமது வயிற்றுப் பகுதியில் இருக்கக்கூடிய தேவையற்ற கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது. இது செரிமானத்தை எளிதாக்கி பசியின்மையை போக்கி பசியை தூண்டுகிறது.

வாழைத்தண்டில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி6 சத்துக்கள் அதிகம் காணப்படுகிறது. இந்த சத்துக்கள், நம் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்கிறது.

இரத்தத்தில் இருக்கக்கூடிய பொட்டாசியம் சத்து தான் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. அந்த வகையில், வாழைத்தண்டில் உள்ள பொட்டாசியம் சத்தானது, நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து எந்த நோயும் நம்மை நெருங்காமல் பாதுகாத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

சிறுநீரக கற்கள் உடையவர்களுக்கு வாழைத்தண்டு சாறு மிகச் சிறந்த மருந்தாகும். வாழைத்தண்டு சாறு சிறுநீரகப் பாதையில் உள்ள நோய் தொற்றுகளை நீக்கி, சிறுநீரகப் பாதையை சுத்தம் செய்கிறது. மேலும் சிறுநீரை பெருக்குகிறது. சிறுநீரகத்தில் உள்ள கற்களை மெல்ல மெல்ல கரைத்து சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது.

வாழைத்தண்டு சாறு துவர்ப்பு சுவை உடையது. எனவே அதை அப்படியே குடிக்க கஷ்டப்படுபவர்கள் அதனுடன் ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை போன்ற வேறு ஏதேனும் பழச்சாற்றை சிறிதளவு கலந்து குடிக்கலாம்.

வாழைத்தண்டை உலர்த்தி பொடியாக்கி சிறிதளவு தேன் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது மஞ்சள் காமாலை நோய் முற்றிலும் குணமடைகிறது. மேலும், கல்லீரலில் தேங்கியுள்ள நச்சு கழிவுகளை அகற்றி கல்லீரலை வலுவடையச் செய்கிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 362

0

0