பார்க்கும்போதே எச்சில் ஊறும் முட்டை பொடிமாஸ் இப்படி செய்யுங்க!

3 July 2021, 9:17 pm
muttai podimas recipe in tamil
Quick Share

உடலுக்கு ஆரோக்கியத்தை தருகின்ற முட்டையை நாம் பல விதமாக சமைத்து சாப்பிடலாம். முட்டை குழம்பு, வேக வைத்த முட்டை, ஆம்லெட், ஹாஃப் பாயில், முட்டை தொக்கு என்று முட்டையில் பல உணவு வகைகளை செய்யலாம். இன்று நாம் முட்டையை வைத்து பொடிமாஸ் செய்யப் போகிறோம். அதனை எப்படி செய்வது என பார்ப்போமா???

தேவையான பொருட்கள்:

முட்டை- 4

பெரிய வெங்காயம்- 2

பச்சை மிளகாய்- 2

தக்காளி- 1

கடுகு- 1/8 தேக்கரண்டி

சீரகம்- 1/2 தேக்கரண்டி

மிளகு தூள்- 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள்- 1/2 தேக்கரண்டி

கரம் மசாலா- 1/4 தேக்கரண்டி

மஞ்சள் தூள்- ஒரு சிட்டிகை

எண்ணெய்- 3 தேக்கரண்டி

கருவேப்பிலை- ஒரு கொத்து

கொத்தமல்லி தழை- சிறிதளவு

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

ஒரு வானலை அடுப்பில் வைத்து இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றுங்கள்.  எண்ணெய் காய்ந்த பிறகு 1/8 தேக்கரண்டி கடுகு போட்டு அது பொரிந்தவுடன் 1/2 தேக்கரண்டி சீரகம், இரண்டு பச்சை மிளகாய், ஒரு கொத்து கருவேப்பிலை, இரண்டு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதற்கு சிறிய வெங்காயம் சேர்த்தால் சுவை கூடுதலாக இருக்கும்.

வெங்காயம் வதங்கியதும் மசாலாக்களை சேர்க்க ஆரம்பித்து விடலாம். ஒரு சிட்டிகை மஞ்சள் தூள்,1/4 தேக்கரண்டி கரம் மசாலா, 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள், 1/4 தேக்கரண்டி மிளகு தூள் போட்டு கலந்து விடவும். இதன் பச்சை வாசனை போன பிறகு ஒரு பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்குங்கள். தக்காளி சேர்க்க பிடிக்காதவர்கள் அதனை தவிர்த்து விடுங்கள்.

இதனை அடி பிடிக்காமல் நன்றாக வதக்குங்கள். இப்போது நாம் முட்டையை ஊற்றி விடலாம். முதலில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். அதன் மேல் நான்கு முட்டையை உடைத்து ஊற்றுங்கள். முட்டை பெரிய துண்டுகளாக வேண்டும் என்றால் உடனே அதனை கிளறாமல் செட் ஆன பிற்பாடு கிளறி விடுங்கள். 

சிறு சிறு துண்டுகளாக வேண்டும் என்றால் உடனே கிளறி கொள்ளலாம். இரண்டு நிமிடங்கள் மட்டும் அப்படியே கிளறி சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி இறக்கி விடலாம். இந்த முட்டை பொடிமாசை சுடு சாதத்தோடு சேர்த்து கிளறி சாப்பிட்டால் முட்டை சாதம் தயார். 

அல்லது தோசை ஊற்றி அதன் மேல் இதனை தூவியும் உண்ணலாம்.

Views: - 213

0

0