பாரம்பரிய நெல்: பெண்களுக்காகவே இயற்கை கொடுத்திருக்கும் வரம் பூங்கார் நெல்!!!

27 January 2021, 10:50 pm
Quick Share

பாரம்பரிய நெல் பட்டியலில் இன்று நாம் பார்க்க இருப்பது பூங்கார் என்னும் வகையாகும். இது ஒரு தனித்துவமான அரிசி. 1952 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெறுக்கில் பல நெற்பயிர்கள் அழிந்து போயின. அந்த சமயத்தில் காப்பாற்றப்பட்ட பயிர் வகைகளில் இது ஒன்றாகும். இந்த பயிரானது வறட்சியிலும், தேங்கி நிற்கும் தண்ணீரிலும் பாதுகாப்பாக வளரக்கூடியது. இப்போது இந்த அரிசியின் பயன்களைப் பற்றி பார்க்கலாம். 

★பூங்கார் அரிசி பெண்களுக்கான ஒரு அரிசியாக கருதப்படுகிறது. ஏனெனில் தாய்ப்பால் சுரக்க செய்வதில் இந்த அரிசி முதன்மையாக கருதப்படுகிறது. 

★தமிழகத்தில் அதிக அளவில் பயிரிடப்படும் பாரம்பரிய நெல் வகையில் பூங்காருக்கு தான் முதல் இடம். இதனை பயிரிடும் போது  குறைவான முதலீட்டில் அதிக லாபத்தை ஈட்டி விடலாம். 

★கர்ப்பிணி பெண்கள் ஆறு மாத காலத்தில் பூங்கார் அரிசியை கஞ்சி வைத்து குடித்து வர வேண்டும். இவ்வாறு செய்யும் போது அவர்களுக்கு சுகப்பிரசவம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த அரிசியில் நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், ஆன்டியாக்ஸிடன்டுகள், மற்றும் தயாமின் போன்ற சத்துக்கள் உள்ளன. 

★இது கர்ப்பிணி பெண்களுக்கு அதிக பயன்களை வழங்குகிறது. மேலும் குழந்தை பெற்ற பாலூட்டும் தாய்மார்களுக்கும் உகந்ததாக இருக்கிறது. பாலூட்டும் தாய்மார்கள் இந்த அரிசியை சாப்பிடும் போது அதிலுள்ள சத்துக்கள் அனைத்தும் குழந்தைகளுக்கு கிடைக்கப் பெறுகிறது. 

★பாரம்பரிய அரிசியாகவே இருந்தாலும் அதனை மூன்று முறையாவது கழுவி, சுத்தம் செய்து எட்டு மணி நேரம் ஊற வைத்த பின் தான் பயன்படுத்த வேண்டும்.

★அரிசியை ஊற வைத்த தண்ணீரை பயன்படுத்தியே அதனை வேக வைத்து கொள்ளலாம். இவ்வாறு செய்யும் போது அதன் சுவை அதிகமாகும். 

★இந்த அரிசியை வேக வைத்து சாதமாக சாப்பிடலாம். அல்லது அரிசியை ஊற வைத்து நிழலில் காய வைத்து ஒன்றும் பாதியுமாக அரைத்து தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காய் சேர்த்து புட்டு செய்யலாம். இடியாப்பம், பால் கொழுக்கட்டை கூட செய்து சாப்பிடலாம். 

★இரவு நேரங்களில் இதனை இட்லி, தோசை, இடியாப்பமாக செய்து சாப்பிடலாம். 

★இந்த அரிசியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எந்த பயமும் இல்லாமல் சாப்பிடலாம். 

★பூங்கார் அரிசி ஒரு ஆழாக்கு எடுத்து கொள்ளுங்கள். இதனோடு ஏழு கிளாஸ் தண்ணீர் ஊற்றி, மேலும் சிறிதளவு பாசிப்பருப்பு, தேவையான அளவு மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்பு ஆகியவை சேர்க்கவும். கூடவே வெங்காயத்தை ஒன்றிரண்டாக அரைத்து அதனையும் சேர்க்கவும். இவை அனைத்தையும் குக்கரில் போட்டு வேக வைக்கவும். அடுத்து ஒரு தாளிப்பு கரண்டியில் சோம்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து தாளித்து கஞ்சியில் கொட்டவும். 

★இந்த கஞ்சியோடு தேங்காய் பால் சேர்த்து கர்ப்பிணி பெண்கள் பருகலாம். இது அவர்களின் கர்ப கால பிரச்சினைகள் பலவற்றிற்கு தீர்வு தருகிறது.

Views: - 0

0

0