இயற்கையாக இரத்த சோகையை குணப்படுத்த இதெல்லாம் பண்ணுங்க!!!

Author: Hemalatha Ramkumar
5 June 2023, 7:35 pm
Quick Share

Images are © copyright to the authorized owners.

Quick Share

இரத்த சோகை என்பது இரத்தத்தில் உள்ள சிகப்பு அணுக்கள் (ஹீமோகுளோபின்) குறைவாக இருப்பதாகும். இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் தான் ஆக்சிஜனை சுமந்து செல்கிறது. இதனால் இரத்தம் எடுத்துச் செல்லக் கூடிய ஆக்சிஜனின் அளவு உடலில் குறைகிறது. இதனால் உடற்சோர்வு, உடலில் வலிமை இல்லாத உணர்வு, மயக்க உணர்வு, அதிக வியர்வை, வாந்தி போன்றவை ஏற்படுகிறது.

இரத்த சோகையானது ஆண்களை விடவும் பெண்களுக்கே அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக பருவ வயதில் உள்ள பெண்களுக்கு அதிகம் காணப்படுகிறது. மாதவிடாய் மற்றும் மகப்பேறு போன்ற காரணங்களால் உடலில் இருக்கக்கூடிய ரத்தம் வெளியேறுகிறது. இதன் காரணமாகவே பெண்களிடையே இரத்த சோகை அதிகமாக இருக்கிறது.

ஒரு பெண் கருவுற்றிருக்கும் போது ரத்த சோகை குறைபாடு இருந்தால் அவருக்கு குறைப் பிரசவம், பிரசவத்தின் போது அதிக இரத்தப்போக்கு, உயர் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் குழந்தையின் எடை குறைதல், மகப்பேறுக்கு பின் போதுமான அளவு தாய்ப்பால் சுரக்காமல் போதல், பிரசவத்துக்கு பின் உடல்நலக் கோளாறுகள் ஏற்படுதல் போன்ற பல பாதிப்புகள் உண்டாகலாம்.

பெரும்பாலும் இரும்புச் சத்து பற்றாக்குறையால் ரத்த சோகை உண்டாகிறது. விட்டமின் – பி9, விட்டமின் – பி12, விட்டமின் – ஏ குறைபாடு ஆகியவையும் இரத்த சோகை உண்டாக காரணங்களாக இருக்கின்றன.
மலேரியா, காசநோய், ஹெச்.ஐ.வி, மரபணு ரீதியாக வரும் ஹீமோகுளோபின் நோய்கள், ஊட்டச்சத்து குறைபாடு, சரிவிகித உணவு உட்கொள்ளாதது ஆகியவை ரத்த சோகை ஏற்பட வழிவகுக்கிறது.

இரும்புச்சத்து, ஃபோலிக் ஆசிட், விட்டமின்கள் மற்றும் தாது சத்துக்களை மாத்திரை வடிவில் உட்கொள்வது ஆகியவற்றை பொதுவாக மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அனைத்து ஊட்டச்சத்துகளும் நிரம்பிய, குறிப்பாக இரும்புச்சத்து மற்றும் நுண்-ஊட்டச்சத்துகள் அதிகம் உள்ள சரிவிகித உணவுமுறையைப் பின்பற்றினால் ரத்த சோகையை எளிதில் தவிர்க்க முடியும்.

கீரைகள், பேரிச்சம் பழம், பால், இறைச்சி, முட்டை, முளை கட்டிய பயறுகள் போன்ற உணவுகளில் இரும்புச்சத்து அதிகமுள்ளது. கீரைகள், மீன், இறைச்சி போன்றவற்றை உண்ணும்போது அவற்றுடன் எலுமிச்சை, நெல்லி போன்ற விட்டமின் – சி நிறைந்த உணவுகளை உட்கொண்டால், நாம் உண்ணும் உணவில் உள்ள இரும்புச்சத்து உடலால் அதிகம் உறிஞ்சப்படும். ஏனெனில் சில உணவுகள் இரும்புச்சத்து உடலால் உறிஞ்சப்படுவதை அதிகப்படுத்துகிறது. வேறு சில உணவுகள் குறைக்கிறது.

இரும்புச்சத்து தவிர ஃபோலிக் ஆசிட், ஜின்க், விட்டமின் – பி12 ஆகியவை நிறைந்துள்ள உணவுகளையும் உட்கொள்ள வேண்டும். மேலும் குடலில் இருக்கும் கொக்கிப்புழு நீக்கமும் ரத்த சோகை வராமல் தடுக்க உதவும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 286

0

0