பாரம்பரிய நெல்: அரசர்கள் சாப்பிட்டு வந்த உயர் ரக கொட்டாரம் சம்பா அரிசி!!!

8 February 2021, 9:18 pm
Quick Share

நாம் இப்போது அனுபவித்து வரும் நவீன வாழ்க்கை முறையை நம் முன்னோர்கள் அனுபவிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் அவர்கள் நூறு வயது வரை ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளனர். நமக்கு சௌகரியமான வாழ்க்கை முறை கிடைத்தாலும் நோயுற்ற உடலை தான் நாம் வைத்து கொண்டு இருக்கிறோம். இதற்கு முக்கிய காரணமாக இருப்பது மாறிப் போன நம் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை தான். 

நம் முன்னோர்களைப் போல உணவு உண்டு வந்தாலே எந்த ஒரு நோயும் இல்லாமல் ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழலாம். அந்த வகையில் முதலில் நாம் மாற்ற வேண்டியது நாம் உண்டு வரும் அரிசியை தான். பாலிஷ் செய்த அரிசியை பயன்படுத்துவதற்கு பதிவாக கைக்குத்தல் அரிசிக்கு மாறுங்கள். இதன் பயன்கள் ஏராளம். இந்த அரிசியினாலான சாதத்தை தினமும் சாப்பிட்டு வந்தாலே எந்த ஒரு நோயுறம் நம்மை நெருங்காது. அதோடு ஏற்கனவே நம்மை வாட்டி வதைக்கும் நோய்களை தடுக்கும் ஆற்றல் நம் பாரம்பரிய அரிசிக்கு உண்டு. 

தினமும் ஒரு பாரம்பரிய அரிசியைப் பற்றியும் அதனை உண்டு வந்தால் நமக்கு கிடைக்கும் நன்மைகளைப் பற்றியும் நாம் பார்த்து வருகிறோம். இன்று நாம் பார்க்க இருப்பது கொட்டார சம்பா என்ற நெல் வகை ஆகும். இதற்கு கருப்பு சம்பா என்ற பெயரும் உண்டு. இந்த நெல் வகை கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தது. 

‘கொட்டாரம்’ பெயர் காரணம்:

கொட்டாரம் என்றால் ‘அரண்மனை’ என்று அர்த்தம். அந்த காலத்தில் அரசர்களின் குடும்பத்திற்காகவே கொட்டாரம் சம்பா நெல் விதைக்கப்பட்டது. நாஞ்சில் நாட்டு மக்கள் இந்த நெல்லை அறுவடை செய்து அரசர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் வழங்கி வந்துள்ளனர். இதன் காரணமாக தான் இதற்கு கொட்டாரம் என்ற பெயர் கிடைத்துள்ளது. 

முதன்மை உணவு:

இந்த நெல் நூற்றி ஐம்பது நாள் வயது கொண்டது. இது ஐந்து அடி உயரம் வரை வளரக்கூடியது. கொட்டாரம் அரிசியில் கார்போஹைட்ரேட் குறைந்த அளவில் உள்ளது. இது பல வகையான உணவுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக கேரளாவின் பிரபலமான உணவான புட்டு மற்றும் கடலைக்கறிக்கு பெயர் பெற்றது. 

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த நாஞ்சில் நாட்டு மக்கள் இந்த கொட்டாரம் சம்பா அரிசியால் ஆன உணவு வகைகளையே சாப்பிட்டு வந்துள்ளனர். இந்த அரிசியோடு துருவிய தேங்காய் சேர்த்து சாப்பிட சுவை கூடுதலாக இருக்கும். இந்த அரிசிக்கு இயல்பாகவே இனிப்பு சுவை உள்ளது.

மருத்துவ குணங்கள்:

◆நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை இந்த அரிசிக்கு உண்டு.

◆மூளை வளர்ச்சியை தூண்டி நம்மை சுறுசுறுப்பாக மாற்றுகிறது.

◆குழந்தைகளை நோய்கள் நெருங்காமல் இருக்க கொட்டாரம் அரிசியினால் சமைத்த உணவுகளை கொடுத்து வாருங்கள்.

◆தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் கொட்டாரம் அரிசியை கஞ்சி வைத்து குடித்து வர தாய்ப்பால் நன்றாக சுரக்கும்.

◆பருவமடைந்த பெண்களுக்கு ஏற்ற இந்த அரிசியை சாதமாக சாப்பிட்டு வர உடல் வலிமை பெறும்.

◆கன்று ஈன்ற பசு மாடுகளுக்கும் இந்த அரிசியை கொடுக்கலாம். 

◆உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து இதயத்தின் ஆரோக்கியத்தை காக்கிறது.

Views: - 4

0

0