குட்டீஸ் முதல் 90’ஸ் வரை சீரக மல்லி சிக்கன் பெரட்டல் இப்படி செஞ்சு கொடுத்து பாருங்க… கேட்டுகிட்டே இருப்பாங்க!

9 July 2021, 6:14 pm
seeram malli chicken perattal dish making
Quick Share

என்ன தான் கவனமாக சமைத்தாலும் ஹோட்டல்களில் வாங்கி உண்ணும் உணவு போல வீடுகளில் செய்வது கடினம் தான். அந்த கவலை இனி வேண்டாம். இன்று ஹோட்டல் டேஸ்டில் நாம் சீரக மல்லி சிக்கன் பெரட்டல் செய்ய போகிறோம். இந்த சிக்கன் வறுவல் ரொட்டி, நான், பூரி, புலவ், நெய் சாதம், ஃபிரைட் ரைஸ் உடன் சூப்பராக இருக்கும். இதன் செய்முறையை பார்ப்போமா…

தேவையான பொருட்கள்:

●சிக்கன்- 750 கிராம்

●வர மல்லி-1 தேக்கரண்டி

●சோம்பு- 3/4 தேக்கரண்டி

●பட்டை- 1

●கிராம்பு- 4

●ஏலக்காய்- 1

●சீரகம்- 1 1/2 தேக்கரண்டி

●மிளகு- 1 தேக்கரண்டி

●காஷ்மீரி மிளகாய்- 2

●காய்ந்த மிளகாய்- 6

●எண்ணெய்- 3 தேக்கரண்டி

●பெரிய வெங்காயம்- 2

●இஞ்சி பூண்டு விழுது- 2 தேக்கரண்டி

●பச்சை மிளகாய்- 2

●மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி

●கறிவேப்பிலை- 2 கொத்து

●கொத்தமல்லி தழை- ஒரு கையளவு

●உப்பு- தேவையான அளவு

செய்முறை:

முக்கால் கிலோ சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். ஆங்காங்கே சிக்கனை வெட்டி கொள்ளுங்கள். அப்போது தான் நாம் சேர்க்கப் போகும் மசாலா சிக்கனுள் இறங்கி சுவையாக இருக்கும்.  கடைகளில் விற்கப்படும் மசாலாக்கலை பயன்படுத்தாமல் நாமே ஃபிரஷ்ஷாக அரைத்து சிக்கனுடன் சேர்க்கப் போகிறோம். 

மசாலா செய்ய முதலில் ஒரு வானலில் ஒரு தேக்கரண்டி  எண்ணெய் ஊற்றவும். ஒரு தேக்கரண்டி வர மல்லி, 1/2 தேக்கரண்டி சோம்பு, ஒரு பட்டை, 4 கிராம்பு, ஒரு ஏலக்காய், 1 1/2 தேக்கரண்டி  சீரகம், ஒரு தேக்கரண்டி   மிளகு, 6 காய்ந்த மிளகாய், 2 காஷ்மீரி மிளகாய் சேர்த்து வறுக்கவும். மிதமான சூட்டில் வாசனை வரும் வரை வறுத்தால் போதுமானது.

வறுத்த பிறகு இதனை ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். அடுத்து கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி தாளிப்பதற்கு 1/4 தேக்கரண்டி சோம்பு போடுங்கள். இரண்டு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் இரண்டு பச்சை மிளகாய், இரண்டு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டின் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். சுத்தம் செய்து வைத்த சிக்கனை சேர்த்து அதனுடன் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் போடவும். பிறகு இதனை மூடி வைத்து ஐந்து நிமிடங்கள் மட்டும் வேக வைக்கவும்.

சிக்கனில் இருந்தே தண்ணீர் வெளியே வரும் என்பதால் தண்ணீர் எதுவும் ஊற்ற வேண்டாம். ஐந்து நிமிடங்கள் கழித்து இரண்டு கொத்து கறிவேப்பிலை போட்டு நாம் அரைத்து வைத்த மசாலாவையும் சேர்த்து கிளறவும். ஒரு கிளாஸ் அளவு தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு வைக்கவும். 

இது இருபது நிமிடங்கள் வரை மிதமான சூட்டில் வேகட்டும். சிக்கன் வெந்தவுடன் ஒரு கையளவு கொத்தமல்லி தழை தூவி சூடாக சீரக மல்லி சிக்கன் பெரட்டலைப் பரிமாறவும்.

Views: - 166

0

0