வைட்டமின் D குறைவாக இருந்தால் உடல் அதனை நம்மிடம் எப்படி தெரிவிக்கும்…???

Author: Hemalatha Ramkumar
25 October 2024, 11:12 am

நமது உடலில் உண்டாகும் எந்த ஒரு உடல்நலக் கோளாறும் ஆரம்பத்தில் அதன் அறிகுறிகளை வெளிப்படுத்தும். ஆனால் அந்த அறிகுறிகளை நாம் அலட்சியப்படுத்தி விட்டால்  அந்த பிரச்சனை அடுத்த கட்டத்திற்கு சென்றுவிடும். எனவே பொதுவாக ஏற்படும் சில ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கான அறிகுறிகளை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. அந்த வகையில் நம்முடைய உடலில் வைட்டமின் டி ஊட்டச்சத்து குறைவாக இருந்தால் என்னென்ன மாதிரியான அறிகுறிகள் தென்படும் என்பதை இப்போது பார்க்கலாம்.

அடிக்கடி உடல் நலக்குறைவு

வைட்டமின் டி குறைவாக இருந்தால் நம்முடைய நோய் எதிர்ப்பு அமைப்பு வலுவிழந்து இருக்கும். இதனால் நமக்கு மிக எளிதாக தொற்றுகள் ஏற்படலாம் மற்றும் அடிக்கடி சளி காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் உருவாகும். 

மனசோர்வு 

வைட்டமின் டி நம்முடைய உடலில் செரடோனின் அளவுகளை தூண்டுகிறது. இந்த குறைபாடு பெரும்பாலும் சோகம் அல்லது மனசோர்வு போன்ற உணர்வுகளுடன் தொடர்புடையதாக அமைகிறது. 

சோர்வு 

கடுமையான வேலை செய்த பிறகு சோர்வு ஏற்படுவது வழக்கம். அதேபோல நல்ல இரவு தூக்கம் இல்லாமல் போனாலும் நாம் சோர்வாக காணப்படுவோம். ஆனால் தரமான தூக்கம் பெற்ற பிறகும் கூட உங்களுக்கு தொடர்ச்சியாக சோர்வு தட்டுகிறது என்றால் அது உங்களுடைய உடலில் வைட்டமின் டி போதுமான அளவு இல்லை என்பதற்கான அறிகுறி. வைட்டமின் டி ஊட்டச்சத்து நம்முடைய ஆற்றல் அளவுகளை பாதிப்பதன் காரணமாக இந்த சோர்வு ஏற்படுகிறது. 

காயங்கள் பொறுமையாக ஆறுதல் 

வழக்கத்தை விட வெட்டுகள் மற்றும் காயங்கள் ஆறுவதற்கு அதிக நாட்கள் எடுத்துக் கொண்டால் அது குறைவான வைட்டமின் டி அளவுகளின் முக்கியமான ஒரு அறிகுறி. வைட்டமின் டி குறைபாடு நம்முடைய உடலில் குணப்படுத்தும் திறனை பாதிப்பதால் இது ஏற்படுகிறது. 

தலைமுடி உதிர்வு 

எதிர்பாராத அளவுக்கு மிக மோசமான முடி உதிர்தல் அதிலும் குறிப்பாக பெண்களில் இது குறைவான வைட்டமின் டி அளவோடு தொடர்புடையதாக இருக்கிறது.

தசை வலி 

தசை வலுவிழந்து காணப்படுதல் அல்லது வலி போன்றவை வைட்டமின் டி குறைபாட்டினால் ஏற்படுகிறது. ஏனெனில் வைட்டமின் டி என்பது நம்முடைய தசைகள் செயல்படுவதற்கு முக்கியமான ஒரு ஊட்டச்சத்து. ஆனால் அந்த ஊட்டச்சத்தை குறைவாக இருக்கும் சமயத்தில் நம்முடைய தசைகள் வலுவிழந்தும், வலியுடனும் இருக்கும். 

முதுகு மற்றும் எலும்பு வலி வைட்டமின் டி ஊட்டச்சத்து உணவிலிருந்து கால்சியம் சத்தை உறிஞ்சுவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இந்த குறைபாடு காரணமாக நமக்கு எலும்பு வலி மற்றும் கீழ் முதுகில் அசௌகரியம் ஏற்படலாம்.

நம்முடைய உடல் ஒரு சில அறிகுறிகள் மூலமாக தான் நம்மிடம் பேசும். அந்த அறிகுறிகளை நாம் புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு செயல்பட்டால் உடலின் ஆரோக்கியத்தை பராமரித்துக் கொள்ளலாம். ஆகையால் எச்சரிக்கையாக இருந்து உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.

  • Idlikkadai vs Good Bad Ugly box office clash அஜித் படத்திற்கு வழிவிட்ட தனுஷ்…ரிலீஸ் தேதியை மாற்றிய படக்குழு..!