“பனையை வச்சவன் பாத்துகிட்டே சாவான்” என்பது உண்மையா? பனை அருமையெல்லாம் உங்களுக்கு தெரியுமா என்ன?

Author: Dhivagar
1 July 2021, 8:26 pm
what are the health benefits of palm tree and its products
Quick Share

பூவுலகின் கற்பக விருட்சம் தான் பல பெருமை வாய்ந்த பனை மரம். இந்த பனையின் அனைத்து பகுதிகளுமே பயனுள்ளவை. பனையைப் பொறுத்தவரை இதில் பல வகைகள் உண்டு. ஆண் பனை, பெண் பனை, கூந்தப்பனை, தாளிப்பனை, குமுதிப்பனை, சாற்றுப்பனை, ஈச்சம்பனை, ஈழப்பனை, சீமைப்பனை, ஆதம்பனை, திப்பிலிப்பனை, உடலற்பனை, கிச்சிலிப்பனை, குடைப்பனை, இளம்பனை, கூறைப்பனை, இடுக்குப்பனை, தாதம்பனை, காந்தம்பனை, பாக்குப்பனை, ஈரம்பனை, சீனப்பனை, குண்டுப்பனை, அலாம்பனை, கொண்டைப்பனை, ஏரிலைப்பனை, ஏசறுப்பனை, காட்டுப்பனை, கதலிப்பனை, வலியப்பனை, வாதப்பனை, அலகுப்பனை, நிலப்பனை, சனம்பனை என அறிந்தும் அறியாமலும் பல வகைகள் உள்ளது. இந்தியா, தமிழ்நாடு மற்றும் இலங்கை ஆகிய பகுதிகளில் பனை அதிகம் பயிர் செய்யப்படுகிறது காணப்படுகிறது. இதை அனைத்து மண் வகைகளிலும் வளர்க்கலாம். நன்கு வறட்சி தாங்கி வளரக்கூடியது.

கிராமப்புறங்களில் ஒரு பழமொழி உள்ளது, “தென்னை வச்சவன் தின்னு சாவான், பனை வச்சவன் பாத்துகிட்டே சாவான்” என்று சொல்வார்கள். இது உண்மையா என்றால் ஆம் உண்மைதான். ஏனெனில் தேங்காய் மரத்தின் ஆயுட்காலம் சுமார் 60 முதல் 70 ஆண்டுகள். ஒருவர் தென்னை வைத்தால் அவரை ஆயுள் முழுக்க அதன் மூலம் பயன் பெறலாம். ஆனால் பனை மரத்தின் ஆயுள் 100 ஆண்டுகளுக்கு மேல் என்று சொல்லப்படுகிறது. இதனால் பனையை ஒருவர் நடவு செய்தால் தன் வாழ்நாள் மட்டுமின்றி தனது அடுத்த தலைமுறையும் அதனால் பயனடைவதைப் பார்த்துக்கொண்டே ஆயுளை முடிக்க முடியும் என்பதை கருத்தில் கொண்டே “தென்னை வச்சவன் தின்னு சாவான், பனை வச்சவன் பாத்துகிட்டே சாவான்” என்று இன்றளவும் கிராமங்களில் சொல்லுகின்றனர்.

பனை மரத்திலிருந்து, நுங்கு, பனம்பழம், பனைஓலை, பனங்கிழங்கு, பனங்குருத்து, பனஞ்சுருக்கு, பனைப்பால், மரம், கருப்பட்டி, கள்ளு, தெளுவு என பல பொருட்கள் கிடைக்கும்.

பனை மரத்தில் இருந்து கல் கிடைக்கும். அதனுடன் சுண்ணாம்பு சேர்த்தால் பால் தெளுவு என்று சொல்வார்கள். தினமும் பால் தெளுவு குடித்தால் உடல் நன்கு குளிர்ச்சி அடையும். இது தினமும் 100-200 மில்லி குடித்துவர உடலுக்கு ஊட்டச்சத்து கிடைக்கும், வயிற்றுப்புண் குணமாகும். இதிலிருந்து கிடைக்கும் புளிப்பேறிய கள் மயக்கம் கொடுக்கும் ஆனால் உடல் நலத்தைக் கொடுக்கும். ஆனால் கள்ளு வேண்டாமென்பவர்கள் தெளுவு குடிக்கலாம். இது உடலுக்கு மிகவும் நன்மைத் தரக்கூடியது. இதை காய்ச்சினால் கருப்பட்டி கிடைக்கும். அதுவும் மிகவும் நல்லது. சாதாரண சர்க்கரைக்குப் பதிலாக கருப்பட்டி சேர்த்துக்கொள்வது மிகச்சிறப்பு.

கோடை காலத்தில் சூரியன் தாக்கத்திலிருந்து நம்மை நாம் காத்துக்கொள்ள உதவும் இயற்கை அருமருந்து நுங்கு என்று சொல்லலாம். இது எல்லா வயதினருக்கும் சிறந்த உணவாகும். வேர்க்குரு குணமாக நுங்கு நீரை வேர்க்குரு இருக்கும் இடத்தில் தடவினால் குணமாகும். வெயில் காலத்தில், நுங்கும் தெளுவும் சேர்த்து குடித்தால் உடலுக்கு குளிர்ச்சி கிடைக்கும்.

அதே போல நுங்கு முற்றி பழுக்கும் போது கிடைக்கும் பனம்பழமும் மிகவும் நல்லது. இது தீயிலிட்டு சுட்டு அதிலிருக்கும் மஞ்சள் ஊண் பகுதியைச் சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். இந்த பனம் பழம் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது.

பனை விதையை புதைத்து வைத்து சில நாட்கள்  கழித்து தோண்டி அந்த விதையை உடைத்து பார்த்தால் சீம்பு கிடைக்கும். இது சிறு குழந்தைகளுக்கு உடலைத் தேற்றும் ஒரு அற்புதமான உணவு. அதே விதையை இரண்டு மூன்று இலை வருமளவுக்கு விட்டால் பனங்கிழங்கு கிடைக்கும் இது மிக நல்ல ஊட்டச்சத்து நிறைந்த உணவு.

பனையோலையில் வேய்த வீட்டில் இருந்தால் எந்த நோயும் அண்டாது என்று பெரியவர்கள் சொல்வார்கள்.  இதனாலேயே விசிறி, தொப்பி, குடை, ஓலைசுவடி போன்ற பழங்கால பொருட்களை எல்லாம் பனையோலையிலேயே செய்யப்பட்டது. இந்தோனேசியாவில் எழுதும் பேப்பராகவே இதை தான் பயன்படுத்துகின்றனர். பனங்காயில் பிரஷ், கயிறு போன்ற பொருட்களும் தயார் செய்யப்படுகிறது.  வேளிகளுக்கும் பனை மட்டை பயன்படும். பனைமரத்தை கொத்தினால் வரும் பாலை கருப்படைம் வண்டிக்கடி, சொறி, ஊறல் போன்ற பிரச்சினைகள் இருக்கும் இடத்தில் தேய்த்து வர சீக்கிரமே குணமாகும். கண்ணில் புண் ஆனால் பனை குருத்து மட்டையைத் தட்டிப்பிழிந்து சாறு எடுத்து தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.

இவ்வளவு பலன் கொடுத்தாலும் நாம் பனை மரத்தை வெட்டுகிறோமே தவிர நடவு செய்வதில்லை. இனியேனும் விழித்துக்கொள்வோம்.  

Views: - 608

4

0