பாரம்பரிய நெல்: பழங்கால மல்யுத்த வீரர்கள் உண்டு வந்த வெள்ளை மிளகுச்சம்பா!!!

27 February 2021, 10:44 pm
Quick Share

பாரம்பரிய நெல் இரகங்களில் வெள்ளை மிளகுச்சம்பா ஒன்று. இந்த அரிசி வகை சற்று வித்தியாசமாக உருண்டை வடிவத்தில் இருக்கும். இந்த அரிசி பார்ப்பதற்கு மிளகு போலவே இருக்கும். அதன் காரணமாகவே இதற்கு மிளகு சம்பா என்ற பெயர் வந்துள்ளது.

வெள்ளை மிளகுச் சம்பா வெண்மையாக இருக்கும். மேலும் இது சன்ன அரிசி வகையை சார்ந்தது. இது நூற்றி முப்பது நாட்கள் வயதுடைய நெல் வகை. உயரமான பகுதிகளில் வளரக்கூடியது. இது நேரடியாக விதைத்து நடவு செய்வதற்கு ஏற்ற நெல் இரகம் ஆகும். 

இது தமிழகத்தில் பரவலாக பயிரிடப்பட்டு வருகிறது. இதனை வளர்ப்பதற்கு எந்த ஒரு செயற்கை உரங்களும் தேவையில்லை. திருந்திய நெல் சாகுபடி என்று சொல்லப்படும் ஒற்றை நாற்று முறையில் இது  விளைவிக்கப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு இருபத்தி ஐந்து மூட்டைகள் வரை மகசூல் தரக்கூடிய நெல் வகை வெள்ளை மிளகு சம்பா. 

பாரம்பரிய அரிசி வகைகளில் சம்பா அரிசிக்கு தனி இடம் உண்டு. இதற்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. அது போல தான் வெள்ளை மிளகுச்சம்பா அரிசியிலும் பல விதமான மருத்துவ நன்மைகளை உள்ளடக்கி உள்ளது. இந்த அரிசியை வடித்த கஞ்சியை குடித்தாலே பசியை உணர்வு ஏற்படும். 

அது மட்டும் இல்லாமல் தலைவலியை போக்கும் தன்மை இந்த அரிசிக்கு உண்டு. வாதம் போன்ற பல விதமான நோய்களுக்கு இது மருந்தாக அமைகிறது. பழங்காலத்தில் வாழ்ந்த மல்யுத்த வீரர்கள் வலிமை பெறுவதற்கு வெள்ளை மிளகு சம்பா அரிசியை தான் சாப்பிட்டு வந்துள்ளனர் என்று வரலாறு கூறுகிறது. 

இந்த வகை பாரம்பரிய நெல் இரகங்களை தற்போது இயற்கை விவசாயிகள் பரவலாக விளைவித்து வருகிறார்கள். பெரும்பாலும் மேட்டுப்பாங்கான பகுதிகள் மற்றும் சமவெளிப் பகுதிகளில் இது விளைவிக்கப்படுகிறது. இந்த அரிசியை கடைகளில் பார்க்க நேர்ந்தால் தவறாமல் வாங்கி சாப்பிடுங்கள்.

Views: - 10

0

0